சிங்கப்பூர், ஜப்பான் விமான நிறுவனங்கள் உடன்பாடு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனமும் கூட்டுத் தொழில் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட இருக்கின்றன. 

விமானப் போக்குவரத்து மையம் என்ற முறையில் சிங்கப்பூருக்கு அந்த உடன்பாடு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் வளர்ந்து வரும் வடகிழக்கு ஆசிய விமானப் போக்குவரத்துச் சந்தையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்த அது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இரண்டு நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு இடைப்பட்ட அந்த உடன்பாடு இம்மாத முடிவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. 

இரு தரப்புகளும் அந்த உடன்பாட்டை அங்கீகரித்தால் இந்த இரண்டு விமான நிறுவனங்களும் பல வழித்தடங்களிலும் தங்களுடைய வளங்களை ஒன்றுதிரட்டி பகிர்ந்துகொள்ள முடியும். 

விமானப் போக்குவரத்துக் கட்டமைப்புகள், விமானப் பயண அட்டவணைகள், விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை, பயணக் கட்டணம் உள்ளிட்ட பலவற்றையும் பற்றி விவாதிப்புகளை நடத்தி அவற்றை ஒருமுகப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடைப்பட்ட விமானச் சேவைகளை இந்த உத்தேச உடன்பாடு உள்ளடக்கும் என்று தெரிகிறது. 

அதாவது ஆல் நிப்பான் ஏர்வேஸ் பயணிகள் சிங்கப்பூரை போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி பல விமானங்கள் மூலம் இதர நாடுகளுக்குப் பயணம் செய்ய இந்த ஏற்பாடு வழிவகை செய்யும்.