சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் உயர, வளர, ஒளிர அரசியல் பரிணாமம் அவசியம்

சிங்கப்பூர் தொடர்ந்து உயர்கின்ற, வளர்கின்ற, ஒளிர்கின்ற நாடாகத் திகழ வேண்டும். இதற்குத் தோதான அரசியல் முறையையும் கலாசாரத்தையும் நாடு பலப்படுத்த வேண்டும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்திக் கூறி இருக்கிறார். 

சிங்கப்பூரர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக்கொள்ளவும் தங்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவும் இத்தகைய ஒரு முறை வழிவகுக்குமென அவர் கூறினார்.

என்றாலும் இது எளிதான பணி அல்ல என்றார் அவர். அரசியல் என்ற கருப்பொருளுடன் நடந்த கொள்கை ஆய்வுக் கழகத்தின் சிங்கப்பூர் கண்ணோட்டம் என்ற மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், ஒளிவுமறைவு இல்லாத சமூகமாக சிங்கப்பூர் இருப்பதால் புற சக்திகள் சிங்கப்பூர் சமூகத்திற்குள் ஊடுருவி, விளைவுகளை ஏற்படுத்த முயல்வதாகவும் இது நாம் எதிர்நோக்கும் பெரிய சவால் என்றும் குறிப்பிட்டார். 

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது நாட்டின் நல்லாட்சி பற்றியதாக இருக்க வேண்டும் என்று அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு சான் வலியுறுத்திக் கூறினார். 

மக்களின் வாழ்வை மேம்படுத்தி அவர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் நல்ல ஆளுமைக்கு அடிப்படை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தனிச்சிறப்பு பொருந்திய நாடாகத் தொடர்ந்து திகழ்வதற்கான மூன்று வழிகளையும் திரு சான் கோடிகாட்டினார். 

பல கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு அதன்மூலம் ஆக்ககரமான தீர்வுகளைக் காண்பது, காலக்கிரம முறைப்படி பரிணமித்து எப்போதுமே பொருத்தமானதாக இருந்து வரும் ஓர் அரசியல் முறையுடன் திகழ்வது, சரியான நியதிகளுடன் கூடிய அரசியல் தலைவர்களைக் கொண்டிருப்பது ஆகியவையே அந்த மூன்று வழிகள் என்றார் அமைச்சர். 

எந்தவொரு ஜனநாயக முறையும் மக்களின் வாழ்க்கையை இன்னும் சிறந்ததாக மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் செயல்களையும் காண வேண்டும் என்றார் அவர்.

ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், தங்களுக்கு எந்த வகை அரசியல் தேவை என்பதை தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட திரு சான், சிங்கப்பூர் எப்போதுமே சிறப்புடன் திகழ வேண்டுமா அல்லது அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் இருந்தால் போதுமானதா என்பதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.  

எந்தவோர் அரசியல் முறையும் எப்போதுமே நூற்றுக்கு நூறு முழுமையானதாக இருந்துவிட முடியாது என்று கூறிய  அமைச்சர், ஆனால் பரிணாம வளர்ச்சி இல்லை என்றால் அது புரட்சியில் போய்தான் முடியும் என்று குறிப்பிட்டார். 

   குழு பிரதிநிதித்துவ தொகுதி முறை, தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறை, இணையவழிச் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டம் (பொஃப்மா) ஆகியவை சிங்கப்பூரின் அரசியல் முறையை மேம்படுத்தும் முயற்சிகளின் பகுதியே ஆகும் என்றார் அமைச்சர்.  

சிங்கப்பூர் தலைவர்கள் பல தனிச்சிறப்பு நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெறும் அரசியல்வாதிகளைக் கொண்டிராமல் உண்மையான அரசியல் தலைவர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon