குழந்தை, தாய்மார் ஆரோக்கிய நடுவம்: சிங்கப்பூரில் முதலாவது

குழந்தை மேம்பாடு, தாய்மை சுகாதாரம் ஆகியவற்றுக்கான சிங்கப்பூரின் முதல் சமூக நடுவம் நேற்று அதிகாரபூர்வமாகத்  தொடங்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் பிள்ளையை ஈன்றெடுத்த தாய்மார்களும் இந்நடுவத்தில் உடல்நல உதவிகளைப் பெறுவர். பொங்கோல் பலதுறை மருந்தகத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய ‘தெமாசெக் அறநிறுவன ஒருங்கிணைந்த தாய்மை, குழந்தை ஆரோக்கிய நடுவம்’ கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது.

கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனை, சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் மற்றும் தெமாசெக் அறநிறுவனம் ஆகியவற்றின் மூன்றாண்டு முன்னோடித் திட்டத்தின் மூலம் இந்நடுவம் உருவானது.

தெமாசெக் அறநிறுவனம் $2.56 மில்லியன் நிதி அளித்து இத்திட்டத்திற்கு ஆதரவு நல்கக் கடப்பாடு கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ நேற்று இந்நடுவத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். நான்கு வயதும் அதற்கும் குறைந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமான முன்கூட்டிய பராமரிப்பு, ஆரம்பகால ஈடுபாட்டுச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவைகளை இத்திட்டத்தின்கீழ் அந்தக் குழந்தைகள் பெறுவர்.

மேம்படுத்தப்பட்ட குழந்தை வளர்ச்சிக்கான பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணித்தல், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து,  தாய்ப்பால் ஊட்டு தலில் தாய்மார்களுக்கான ஆதரவு போன்ற சேவைகளையும் நடுவம் வழங்கும். திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை 1,679 குழந்தைகள் தங்களது வளர்ச்சிக்கான பரிசோதனைகளை 9, 18, 30வது மாதங்களில் பெற்றனர். அந்தப் பரிசோதனைகளின் விளைவாக 200 குழந்தைகள் வளர்ச்சி தாமதமடைந்தது கண்டறியப்பட்டு அடுத்தக்கட்ட மதிப்பீட்டுக்கும் நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டனர்.

மேலும், பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் மன அழுத்தத்துக்கு ஆளான தாய்மார்களும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். டிசம்பர் 31 வரை 1,126 தாய்மார்கள் குழந்தையைப் பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கு அப்பரிசோதனைகளைப் பெற்றனர். அவர்களில் 28 பேரின் நிலைமை முன்கூட்டியே கண்டறியப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சைக்கு ஈடுபடுத்தப்பட்டனர். 

சிங்கப்பூரில் குழந்தையை ஈன்றெடுத்த பின்னர் பத்தில் ஒரு பெண் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 5,000 குழந்தைகள்-தாய்மார் ஜோடி களுக்குப் பலன் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முன்னோடித் திட்டம் என சிங்ஹெல்த் குழுத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஐவி இங் கூறினார். 

குழந்தை வளர்ச்சி, ஆரோக்கியம், பிள்ளை வளர்ப்பு ஆகியன தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் குழந்தைகளின் சுகாதாரத்தில் பலதுறை மருந்தகம், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் திறன்களை வளர்ப்பதும் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றார் அவர்.