நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; பின்வாங்கும் லீ ஷெங் வூ

பிரதமர் லீ சியன் லூங்கின் தம்பி மகனான லீ ஷெங் வூ, தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு குறித்த  நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று புதன்கிழமை (ஜனவரி 22ஆம் தேதி) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். திரு ஷெங் வூவின் தற்காப்பு வாதத்தில் மதிப்பு இல்லை என அவரே ஒப்புக்கொள்வதை அந்த முடிவு தெளிவாகக் காட்டுவதாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

“உண்மை நிலை என்னவென்றால், திரு ஷெங் வூ  இந்த விசாரணையில் சில கடுமையான கேள்விகளை எதிர்நோக்குகிறார். தாம் நடந்துகொண்ட விதத்தின் காரணமாக தம்மால் ஆராயப்படுவதை எதிர்கொள்ள முடியாது என்பதை திரு ஷெங் வூவுக்கே தெரியும் என்பது அப்பட்டமான ஒன்று. எனவே அவர் தப்பியோடுவதற்காக சாக்குபோக்குகளை உருவாக்கியுள்ளார்,” என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

திரு லீ சியன் யாங்கின் மூத்த மகனான திரு ஷெங் வூ, 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவுக்காக அவருக்கு நீதிமன்றக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. 

சிங்கப்பூர் அரசாங்கம் வழக்காடுதலை மிகவும் சார்ந்துள்ளது என்றும் தனக்கு எளிதில் பணிகிற நீதிமன்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்றும் திரு ஷெங் வூ அந்தப் பதிவில் எழுதினார். 

38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் வீடு தொடர்பில் பிரதமர் லீக்கும் அவரது உடன்பிறப்புகளுக்கும் இடையிலே நிலவிய குடும்ப பூசலின் தொடர்பில் அந்தப் பதிவு எழுதப்பட்டிருந்தது. 

“தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், சமூக ஊடகத்தில் வெளிவந்த ஒரே ஒரு பத்தியைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ள சட்ட ஆவணங்களை அந்நேரத்தில் சமர்ப்பித்திருந்தது,”என்றார் அவர்,

தமது ஆணைப் பத்திரத்தின் சில பகுதிகளை நீக்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் விண்ணப்பித்திருந்ததாகவும் திரு ஷெங் வூ அந்தப் பதிவில் எழுதினார்.  நீக்கப்பட்ட பகுதிகள் நீதிமன்ற விசாரணையின்போது கருத்தில் கொள்ளப்படாது.

“மேல்முறையீடு நீதிமன்றத்தில் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்று எனக்கு எதிராகச் செயல்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டது. 

“புதிய சட்டத்தின் அமலுக்கு முன்பு செய்யப்பட்ட செயலுக்கு எதிராக அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது நியாயமல்ல என முடிவு செய்தது,” என்று அவர் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவங்களைக் கருதியே, எனக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்களிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். இவ்வாறு பங்களிப்பதன் மூலம் நான் தலைமைச் சட்ட அதி காரி அலுவலகத்தின் நடத்தைக்கு மதிப்பு அளிக்கப்போவதில்லை” என்று அவர் எழுதியுள்ளார்.

நண்பர்களுக்காக மட்டுமே பதிவு செய்யப்படும் ஃபேஸ்புக் பதிவுகளைத் தனிப்பட்ட பதிவுகளாகத் தொடர்ந்து கருதப்போவதாகவும் தமது உறவினரும் பிரதமர் லீயின் மகனுமான லீ ஹோங்யீயை தம் ஃபேஸ்புக் நண்பர் பட்டியலிலிருந்து நீக்கப்போவதாகவும் திரு ஷெங் வூ தெரிவித்தார்.

இந்தப் புதிய சட்டம், அதன் தோற்றத்திற்கு முன்பான நிகழ்வுகளுக்கு அமல்படுத்தக்கூடியது அல்ல என்று தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் திரு ஷெங் வூவுக்கு எதிராக அனுப்பப்பட்ட பத்திரங்கள்  செல்லுபடியாகும் என முடிவு செய்திருக்கிறது.

திரு ஷெங் வூ தமது பதிவுக்காக மன்னிப்பு கேட்டு அதனை மீட்டுக்கொள்ள  தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேட்டிருந்ததாகக் குறிப்பிட்டது.  இதற்கு அவர் உடன்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் அவருக்கு எதிராக எடுக்கப்படமாட்டா எனத் தெரிவித்ததாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கூறியது.