சுடச் சுடச் செய்திகள்

திடீர் வெள்ளத்தைக் கையாள புதிய வானிலை முன்னுரைப்பு

மழைநீர் அளவைக் கண்காணித்து, மதிப்பீடு செய்யும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. 

இது மழைநீர் அளவை முன்கூட்டியே அறிந்துகொள்வதுடன் எந்தெந்த பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என்பதையும் புதிய முறையின்வழி தெரிந்துகொள்ளலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த முறை 2018ஆம் ஆண்டு இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, மழை பெய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே முன்னுரைப்பைத் தெரிவித்துவிடும். அது கிட்டத்தட்ட 65 விழுக்காடு சரியானதாக இருக்கும் என்றும் கழகம் கூறியது.

ஆண்டிறுதி வடகிழக்கு மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முறையை வெள்ள நிர்வாக செயல்முறையுடன் கடந்த ஆண்டு இறுதியில் இணைத்து விட்டோம் என்று கூறிய கழகம், தனது கூட்டு செயல்பாட்டு நிலையம் வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை அறிந்து அங்கு உடனடி பதில் நடவடிக்கைக் குழுக்களை அனுப்பும் என்றும் விளக்கியது. 

அந்த இடங்களுக்குச் சென்றவுடன் கழகத்தின் அதிகாரிகள் வெள்ள நிலவரத்தைக் கணித்து தேவை ஏற்பட்டால், போக்குவரத்தை திருப்பி விடுவார்கள் அல்லது வெள்ளநீரை வேறு இடத்துக்கு மாற்றிவிடும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

“பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழும் மிக மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்கிறோம். பின்னர் அதனை எதிர்கொள்ளும் நடவடிக்கையைச் செயற்படுத்துகிறோம்,” என்றார் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைப் பிரிவின் இயக்குநர் திரு இயோ கெங் சூன்.

“இந்தப் புதிய முறை மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைப் பெருமளவில் குறைத்து, அபாயத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம்,” என்றும் திரு இயோ கூறினார்.

உள்ளூர் வானிலை முன்னுரைப்புக்கும் ஆகாயப் போக்குவரத்துக் கண்காணிப்புக்கும் கடல்துறை கலங்கள் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படும் ‘X-band’ ரக ரேடார்கள் மழைநீர் கண்காணிப்புக்கும் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 

இந்த ‘X-band’ ரக ரேடார் 50 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மழைநீர் அளவைக் கணக்கிடும் ஆற்றல் பெற்றது என்றும் கூறப்பட்டது.   

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon