பணிப்பெண்ணை தாக்கிய விமானத் தொழில்நுட்பருக்குச் சிறை

1 mins read
005058a6-86bc-49d1-ad78-8986f9eaa588
பணிப்பெண்ணைத் தாக்கி கொடுமைப்படுத்தியதற்காக யுஸ்னி யூனோஸுக்கு நேற்று நான்கு மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் பணிப்பெண் நென்டிக்கு இழப்பீட்டுத் தொகையாக $1,500 கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது. படம்: எஸ்டி -

விமானத் தொழில்நுட்பரான ஒருவர் 2018ஆம் ஆண்டு நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலின்போது தனது இந்தோனீசியப் பணிப்பெண்ணைக் கொடுமைப் படுத்தியதுடன் அவரை பலமுறை தாக்கினார்.

அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறு வனத்தில் வேலை செய்யும் 46 வயது யுஸ்னி யூனோஸ் (படம்), அன்று மாலை அவர் தூங்கச் செல்கிறார் என்று தன்னிடம் கூறாததற்கு, தனது வலது கையால் 27 வயது குமாரி நென்டி ருஸ்னியாந்தியின் இடது காதைத் திருகினார்.

இனியும் அந்த வீட்டில் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த நென்டியும் அந்த வீட்டின் மற்றொரு பணிப்பெண்ணான குமாரி ராணி நுர்ஹயாத்தியும் 2018 ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று தங்கள் முதலாளியின் தரை வீட்டின் சன்னல் மூலமாக வெளியே குதித்து, தப்பித்து ராணியின் பணிப்பெண் முகவரிடம் உதவி நாடினார்கள். யுஸ்னி அன்று போலிசால் கைது செய்யப்பட்டார்.

தனது பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதற்காக வும் அவரைத் தாக்கியதற்காகவும் மூன்று பிள்ளைகளின் தந்தையான யுஸ்னிக்கு நேற்று நான்கு மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் குமாரி நென்டிக்கு இழப்பீட்டுத் தொகையாக $1,500 கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.