சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது மலேசிய அரசு சாரா அமைப்பு

மலேசியாவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்று சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படும் முறை குறித்து மலேசியாவின் லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டியின் (எல்எஃப்எல்) குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும் அபத்தமானவை என்றும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு கடந்த புதன்கிழமை சாடியது.

இந்த உண்மையற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக 'பொஃப்மா' எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை அமைச்சு பயன்படுத்தி, பொய்ச் செய்தியைத் திருத்தும்படி குற்றச்சாட்டை முன்வைத்த எல்எஃப்எல் அமைப்புக்கும் அதைப் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் ஆர்வலர் கெர்ஸ்டன் ஹான், தி ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளம், யாஹு சிங்கப்பூர் ஆகிய மூன்று தரப்பினருக்கும் அமைச்சு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய ‘எல்எஃப்எல்’ அமைப்பு, தங்கள் சார்பில் டைம் அண்ட் கமானி சட்ட நிறுவனத்தின் மூலம் இன்று (ஜனவரி 24) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் சண்முகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தது.

தாமும் ‘எல்எஃப்எல்’ அமைப்பின் இயக்குநர் மெல்லிசா சசிதரனும்  தெரிவித்த கருத்து பொய்யானது என்று திருத்தக் குறிப்பு இட வேண்டும் என்று தங்களுக்கு உத்தரவிடப்பட்டதற்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எல்எஃப்எல் அமைப்பின் நிறுவனர் என். சுரேந்திரன் தனது மனுவில்  கோரியிருந்தார்.

தாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், 'பொஃம்பா' சட்டத்தின்படி தாங்கள் குற்றம் புரிந்தவர்களாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று திரு சுரேந்திரன் வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வந்தபோது மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'பொஃம்பா' சட்டத்தின்படி மலேசியாவில் உள்ள தங்களுக்கு எதிராக பிரதிவாதியான திரு சண்முகம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எங்கள் கோரிக்கைக்குத் தேவையான ஆதாரங்களுடன் நாங்கள் மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதன் தொடர்பான விசாரணைத் தேதிக்காகக் காத்திருக்கிறோம் என்றும் திரு சுரேந்திரன் சொன்னார்.

தங்களுக்கு எதிராக திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவின் பேச்சு சுதந்திரத்தில் தலையிடுகிறது என்று திரு சுரேந்திரன் தமது மனுவில் வழக்கு தொடுத்த காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திருவாட்டி அம்பிகா ஸ்ரீநிவாசனும் வழக்கறிஞர் குர்டியால் சிங்கும் தங்களுக்கு வாதிடுவார்கள் என்றும் திரு சுரேந்திரன் கூறினார்.

மலேசிய குடிமக்களுக்கு எதிராக தனது சட்டங்களை நீட்டிப்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் அசாதாரணமான போக்கைப் பிரதிபலிக்கிறது என்று திரு சிங் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படும்போது கயிறு அறுந்தால் அதை மூடிமறைக்க, அந்தக் கைதியின் பின் கழுத்தைப் பலங்கொண்டு உதைத்து முறிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எல்எஃப்எல் அமைப்பு இம்மாதம் 16ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது திருத்த உத்தரவை பின்பற்ற மறுத்த எல்எஃப்எல் அமைப்பின் இணையத்தளத்தை முடக்க தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் சிங்கப்பூரின் அனைத்து இணையச் சேவை நடத்துநர்களையும் கேட்டுக்கொள்ளப் போவதாக என்று நேற்று  அறிவித்தது.

#தமிழ்முரசு #அமைச்சர்சண்முகம் #மலேசியஅமைப்புவழக்கு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon