சிங்கப்பூரில் 4வது ஆள் ஒருவருக்கு வூஹான் கிருமி தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது

2 mins read
4f69a5c0-89c7-42c2-a8c1-fbc38281fa49
சிங்கப்பூரில் வூஹான் கோரோனா கிருமி நான்காவது ஆள் ஒருவருக்குத் தொற்றியிருப்பது நேற்று இரவு 9.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் செங்காங் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், ஊழியர் ஒருவர் முகக் கவசத்துடன் காணப்படுகிறார். படம்: எஸ்பிஎச் -

சிங்கப்பூரில் வூஹான் கோரோனா கிருமி தொற்றிய 4 வது ஆள் ஒருவர் செங்காங் பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது நிலைமை இப்போது சீராக உள்ளது என அமைச்சு தெரிவித்தது.

முன்னதாக அந்த 36 வயது ஆடவர் செந்தோசா ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருக்கு கோரோனா கிருமி தொற்றியிருப்பது சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமியால் பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் அவரது குடும்பத்தாருடன் யூஹானில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனவரி 22ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். ஜனவரி 23ஆம் தேதி அவர், தொடர்ச்சியான இருமலால் அவதிப்பட்டார். அதற்குச் சிகிச்சைப் பெற ஜனவரி 24ஆம் தேதி அவர் செங்காங் பொது மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கோரோனா கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரைத் தனிமைப்படுத்தினர். மருத்துவச் சோதனைகளுக்குப் பிறகு கோரோனா வைரஸ் அவரைத் தாக்கியிருப்பது உறுதியானது.

இதற்கு முன்பு ஜனவரி 23, 24 ஆகியே தேதிகளில் மூன்று பேருக்கு கோரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கோரோனா கிருமித் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட முதல் ஆடவரும் வூஹானில் இருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருந்தார். இப்போது சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருடன் வந்திருந்த அவருடைய 37 வயது மகனுக்கு கோரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மூன்றாவதாக சீனாவில் வந்திருந்த 53 வயது பெண்மணி ஒருவருக்கும் வூஹான் கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.