சீனாவின் ஹங்சாவ் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் சிங்கப்பூர் திரும்ப ஏற்பாடு

வூஹான் கொரோனா வைரஸ் தொடர்பில் சீனாவின் ஹங்சாவ்  நகரில் ஒரு நாளுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலிவு கட்டண விமானச் சேவை வழங்கும் ஸ்கூட் விமானத்தில் சிங்கப்பூர் பயணிகளும் அதன் விமானப் பணியாளர்களும் நேற்றிரவு நாடு திரும்புவதாக இருந்தது.

அவர்களை இங்கு அழைத்து வர ஸ்கூட் டிஆர்5001 விமானம் நேற்று நண்பகல் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.  நான்கு வயது சிறுவன் உட்பட ஒன்பது சிங்கப்பூர் பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்களுடன் அந்த விமானம் நாடு திரும்புவதாக இருந்தது.

ஹங்சாவ்   நகரிலிருந்து நேற்று இரவு 7 மணிக்குப் புறப்படுவதாக இருந்த அந்த விமானம், சிங்கப்பூரில் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு தரையிறங்குவதாக இருந்தது.

ஸ்கூட் டிஆர்188 விமானம் ஹங்சாவ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தரையிறங்கியதையடுத்து, வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்த 314 பயணிகளும் ஹங்சாவ்   அனைத்துலக விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் மனிதர்களுக்கு இடையே வைரஸ் வேகமாகப் பரவி வரும் வேளையில், அம்மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமையிலிருந்து அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கும் ஹூபெய் மாநிலத் தலைநகர் வூஹானுக்கும் இடையே அனைத்து ஸ்கூட் விமானச் சேவைகளையும் தான் ரத்து செய்திருப்பதாக நேற்று முன்தினம் ஸ்கூட் தெரிவித்தது.

மேற்கூறப்பட்ட காலகட்டத்தில் வூஹானுக்கு பயணம் மேற்கொள்ள பதிவு செய்திருந்தோர், அங்கு செல்வதற்குப் பதிலாக சீனாவின் மற்ற இடங்களுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தரும் ஏற்பாடும் நடப்பில் உள்ளது.

டிஆர்188 விமானத்தில் இருந்த 314 பயணிகளில் 110 பேர், தொடக்கத்தில் வூஹான் நகருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலும் பின்னர் அதற்குப் பதிலாக ஹங்சாவ்   நகருக்குப் பயணம் செய்ய முடிவெடுத்தனர். அவர்களை வூஹானைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

ஹங்சாவ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு இந்த 110 பயணிகளும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரிடம் கூடுதல் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஹங்சாவ் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 13 மணி நேரம் செலவிட்ட பிறகு அந்நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அந்த விமானத்தில் இருந்த சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர்.

தங்களுக்கு போர்வை, உணவு, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.