சுடச் சுடச் செய்திகள்

சான் சுன் சிங்: வூஹான் கிருமித் தொற்று நாட்டின் பொருளியலைப் பாதிக்கக்கூடும்

நாட்டில் தற்போது துளிர்விடத் தொடங்கியுள்ள வூஹான் கொரோனா கிருமித் தொற்று, சிங்கப்பூரின் பொருளியலைப் பாதிக்கும் என்று நேற்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். குறிப்பாக சுற்றுப்பயணம் தொடர்பான துறைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டினார்.

“தற்போதைய சூழ்நிலை கொஞ்ச காலத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் பொருளியல், வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் நம்பிக்கையில் தாக்கம் ஏற்படும் என்று வர்த்தக, தொழில் நோக்கிலிருந்து உறுதியாகக் கூறலாம்,” என்றார் அமைச்சர் சான்.

சுற்றுப்பயணத் துறை தொடர்பில் பயண முகவர்கள் மட்டுமின்றி உணவு மற்றும் பானத் துறை, வர்த்தகத் துறை, போக்குவரத்துத் துறை, விருந்தோம்பல் துறைகள் ஆகியவற்றுக்கு உடனே அதிகத் தாக்கம் ஏற்படும் என விவரித்தார் திரு சான்.

ஆனால் இதற்குமுன் 2003ஆம் ஆண்டில் சார்ஸ் தொற்று ஏற்பட்டபோது வர்த்தகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக ஆதரவு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. அதேபோல் தற்போது உருவாகியுள்ள சூழலிலும் உதவி கிட்டும் என்று திரு சான் குறிப்பிட்டார்.

வர்த்தக ரீதியாக ஏற்படும் செலவுகளைக் குறைப்பது, பணப் புழக்கத்தை எளிதாக்குவது, ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் வைத்திருப்பது போன்றவற்றின் தொடர்பில் உதவி வழங்கப்படும் என்று பகிர்ந்துகொண்டார் திரு சான். 

“சிங்கப்பூரர்களுக்கு உதவி வழங்க அரசாங்கத்திற்குத் தகுந்த திட்டங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

“அத்துடன் நம் வர்த்தகச் சங்கங்கள் மற்றும் தொழில் சபைகள், மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்ற ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வோம்,” என்றார் அவர்.

வூஹான் கிருமித் தொற்றால் ஏற்படக்கூடிய தாக்கத்தைச் சமாளிக்கவும் பாதிக்கப்படுவோருக்குத் தேவைப்படும் உதவியை மதிப்பிடுவதும் தொடர்பில் வர்த்தகச் சங்கங்கள் மற்றும் தொழில் சபைகளுடன் சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.

தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கத்தை மட்டுப்படுத்தி ஊழியர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதற்கே முன்னுரிமை அளிப்பதாக திரு சான் குறிப்பிட்டார். 

இதற்காக மனிதவள அமைச்சும் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் இணைந்து பெரும் பங்காற்றும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்னமும் தங்களின் தொழில் தொடர்ச்சித் திட்டங்களைப் புதுப்பிக்காமல் உள்ள நிறுவனங்களுக்கு அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் திரு சான்.

“பொருளியல் அடிப்படையில் நம் மீள்திறனை நாம் வலுப்படுத்திக் கொள்வோம். அதற்கு நம் பன்முகத்தன்மை வாய்ந்த தொழில்துறை மற்றும் சந்தை திட்டங்கள் கைகொடுக்கும்,” என்றார் திரு சான்.

வூஹான் கிருமித் தொற்று தொடர்பில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது திரு சான் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon