சீனாவிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு 14 நாள் கட்டாய விடுப்பு

சீனாவிலிருந்து திரும்பும் மாணவர்களுக்கு 14 நாள் கட்டாய விடுப்பு

3 mins read
bfc9382f-0ce6-42d3-b387-07e0fc076bf5
இந்தப் புதிய நடவடிக்கையால் சீனாவிலிருந்து இம்மாதம் நடுப்பகுதியில் சிங்கப்பூர் திரும்பியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படும் 800 மாணவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆலோசனை கூறப்படுவார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வூஹான் கிருமிக்கு எதிரான நடவடிக்கையாக கடந்த 14 நாட்களுக்குள் சீனாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய பள்ளி மாணவர்களும் கல்வி அமைச்சின் பணியாளர்களும் கட்டாயமாக 14 நாள் விடுப்பில் செல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள், தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், சிறப்புக் கல்விப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், மில்லெனியா கழகம், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றுக்கு இது பொருந்தும் என்று அமைச்சர் ஓங் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள்நிலை பணிக்குழு செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

கல்வி அமைச்சு தவிர்த்த இதர பாலர்பள்ளிகளின் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அதே செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அப்படி என்றால், சீனாவிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தோர் 15 நாட்களுக்குப் பிறகுதான் அதுவும் அவர்களின் உடல்நிலை சீராக இருந்தால்தான் இம்மாதம் 29ஆம் தேதி பள்ளிக்கும் பணிக்கும் திரும்ப முடியும்.

ஒருவேளை ஜனவரி 27ஆம் தேதி அதாவது நேற்று அவர்கள் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்திருந்தால் அவர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதிதான் பள்ளிக்குத் திரும்ப முடியும்.

"சீனாவிலிருந்து வரும் கிருமி தொற்று சம்பவங்களைக் குறைக்க நாங்கள் விரும்புகிறோம். இளம் வயதுடையவர்களைப் பாதுகாக்கவே இந்நடவடிக்கையை எடுத்துள்ளோம்," என்றார் கல்வி அமைச்சர்.

இந்தப் புதிய நடவடிக்கையால் சீனாவிலிருந்து இம்மாதம் நடுப்பகுதியில் சிங்கப்பூர் திரும்பியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படும் 800 மாணவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆலோசனை கூறப்படுவர்.

அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்கும் முறையைப் பின்பற்றுவார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டிலிருந்து மூன்று மாணவர்கள் இந்தப் புதிய நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள் என்று திரு ஓங் எதிர்பார்க்கிறார்.

"பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் சென்று கொண்டிருக்கும் ஹாங்காங்கைக் காட்டிலும் இது சற்று சமாளிக்கக்கூடிய எண்ணிக்கைதான்.

"அனைத்துலக பள்ளிகள் போன்ற தனியார் கல்விக் கழகங்களுடன் தமது அமைச்சு தொடர்பு கொண்டு இந்தப் புதிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும். இதற்கு அந்தக் கழகங்களும் ஒத்துழைப்பு நல்கும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றும் அமைச்சர் விவரித்தார்.

மாணவர்கள், கல்வி அமைச்சின் பணியாளர்கள் என்று மொத்தம் ஐந்து பேர் கடந்த 14 நாட்களில் ஹுபெய் மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்கள் என்று கூறிய திரு ஓங், தொடக்கநிலையிலிருந்து மேல்நிலை வரை பயிலும் மாணவர்களும் அதில் அடங்கியுள்ளனர் என்றும் சொன்னார்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன. பள்ளிகளில் நாள்தோறும் மாணவர்கள் உடல்வெப்பத்தைச் சோதிக்கும் முறை நடப்பில் இருக்கும்.

தங்கள் பிள்ளைகளுக்கு உடல் நலமில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு பெற்றோருக்கு கல்வி அமைச்சு ஆலோசனை கூறுகிறது.

பாலர்பள்ளி நடத்துநர்களும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 14 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுக்க வேண்டும். அது அவர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க உதவியாக இருக்கும் என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

சிங்கப்பூரில் தற்போது மொத்தம் 25,000 பாலர்பள்ளி ஊழியர்களும் 180,000 பாலர்பள்ளி மாணவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த 14 நாட்களில் கிட்டத்தட்ட 500 முதல் 600 ஊழியர்களும் 1,000 பிள்ளைகளும் சீனாவுக்குச் சென்றிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நடவடிக்கைக்காக பெற்றோர், பாலர்பள்ளி மாணவர்கள், பாலர்பள்ளி நடத்துநர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

"நமது சமூகம், நமது குடும்பங்கள், நமது பிள்ளைகள் ஆகியோர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளுக்கு உங்கள் புரிந்துணர்வையும் ஆதரவையும் நாடுகிறோம்," என்றும் திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.