சுடச் சுடச் செய்திகள்

‘வூஹான் கிருமி தொடர்பில் பொய்ச்செய்தி பரப்புவோர் மீது பொஃப்மா சட்டம் பாயும்’

வூஹான் கிருமித் தொற்று தொடர்பில் பொய்ச்செய்தி பரப்புவதால் சிங்கப்பூரர்களிடையே தேவையில்லாத பதற்றமும் பயமும் அதிகரிக்கக்கூடும்.

ஆகவே, அத்தகைய பொய்ச்செய்தியை பரப்புவோருக்கு எதிராக பொஃப்மா எனப்படும் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் எஸ். ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.

“பொஃப்மா சட்டத்தின்கீழ் பொய்ச்செய்தி பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,” என்று நேற்று நடைபெற்ற அமைச்சர்கள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் திரு ஈஸ்வரன் சொன்னார்.

வூஹான் கிருமியால் சிங்கப்பூரில் ஒருவர் மாண்டுவிட்டார் என்று பொய்யான செய்தியைத் தனது தளத்தில் பதிவிட்ட ஹார்ட்வேர்ஸோன் எனும் இணையக் கருத்தரங்கு தளத்துக்கு எதிராக நேற்று முன்தினம் பொஃப்மா அலுவலகம் திருத்த உத்தரவு பிறப்பித்ததைச் சுட்டிய அமைச்சர், அந்தப் பதிவு நீக்கப்பட்டாலும், அது பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டரை மணி நேரத்துக்குள்ளாக 4,600 பேர் பார்த்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.

“அந்தப் பதிவைப் பார்த்த ஒருவர் அதை உண்மை என நம்பி மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம்,” என்று அமைச்சர் கூறினார்.

“தகவல் என்பது ஒருவருக்கு செய்தியைத் தெரிவித்தல், கற்பித்தல், நம்பிக்கையை வளர்த்தல் போன்றவற்றைச் செய்தாலும் அந்தத் தகவல் பொய்யாக இருந்துவிட்டால், அதுவே மக்களிடையே பதற்றத்தை, பயத்தை, பீதியை ஏற்படுத்திவிடும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பரவிய பொய்ச்செய்திகளுக்கு எதிராக அரசாங்கம் திருத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருந்தது.

வூஹானிலிருந்து சிங்கப்பூர் வந்த சீனச் சுற்றுப்பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்று கடந்த சனிக்கிழமை, ஹார்ட்வேர்ஸோன் வெளியிட்ட செய்திகள் பொய் என மறுத்து சுகாதார அமைச்சும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் விளக்கம் அளித்தன.

சீனாவிலிருந்து வரும் நோயாளிகள் கேகே மகளிர், சிறுவர் மருத்துவமனைக்கும் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் அனுப்பப்படுவதால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது.

இந்தச் செய்தி பொய்யானது என்றும் அனைத்து மருத்துவமனைகளும் கிருமித் தொற்று சம்பவங்களைக் கையாள திறன் பெற்றுள்ளன என்றும் சுகாதார அமைச்சு அன்றே விளக்கம் அளித்தது.

அதே வெள்ளிக்கிழமையன்று, சீமெய்யில் உள்ள ஈஸ்ட்பாயின்ட் கடைத்தொகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கிருமித் தொற்று நோயாளி ஒருவர் அங்கு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று மற்றொரு வாட்ஸ்அப் செய்தி பரப்பப்பட்டது.

உண்மையில் நோயாளி ஒருவர் அங்குள்ள ராஃபிள்ஸ் மருந்தகத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் கூடுதல் பரிசோதனைக்காக அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

“வூஹான் கிருமித்தொற்றை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிக்கு எல்லா சிங்கப்பூர்களின் ஒத்துழைப்பும் உதவியும் தேவைப்படுகின்றன. 

“இதில் வீண் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொய்ச்செய்தியைப் பரப்ப வேண்டாம். நம்பகமான செய்திகளை மட்டும் சார்ந்திருக்கவும்,” என்று அமைச்சர் கூறினார்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon