ஹாங்ஸோவிலிருந்து திரும்பிய 18 சிங்கப்பூர் குடியேறிகள், 10 சிப்பந்திகள்

2 mins read

சீனாவின் ஹாங்ஸோ நகரிலிருந்து பதினெட்டு சிங்கப்பூர் குடியிருப்பார்களும் ஸ்கூட் விமான நிறுவனத்தின் பத்து விமானச் சிப்பந்திகளும் நேற்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் இங்கிருந்து அனுப்பப்பட்ட சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர் என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

ஸ்கூட்டின் சிறப்பு விமானச் சேவையான TR5001 நேற்று முன்தினம் சிங்கப்பூரை விட்டு நண்பகல் வாக்கில் புறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இரவு 8.28 மணிக்கு TR1189 எனும் விமானச் சேவை மூலம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டனர்.

அந்தப் பயணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்கூட் விமானம் மூலம் ஹாங்ஸோ நகருக்குச் சென்றிருந்தனர். அந்த விமானத்திலிருந்த 314 பயணிகளில் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் ஹாங்ஸோ அனைத்துலக விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டனர். பின்னர் அந்தப் பயணிகளுக்கு கொரோனா கிருமி இருந்ததை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சாங்கி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பயணி களுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் காய்ச்சல் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், அவர்களின் உடல்நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு கூறியது.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, கிருமித் தொற்று இருந்த இருவரிடம் நெருக்கமாக இருந்த 15 பேருக்குத் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எஞ்சியோர் தொலைபேசி உரையாடல் மூலம் கண்காணிப்படுவார்கள்.

தனிமைப்படுத்தப்படுவோரிடம் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் சிறப்பு மருத்துவ வண்டி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சு கூறியது.