வூஹான் கிருமித் தொற்றைச் சமாளிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆகவே, சிங்கப்பூரர்கள் அதன் தொடர்பில் பதற்றம் அடையாமல் அமைதியாக இருக்கும்படி பிரதமர் லீ சியன் லூங் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
உலகமெங்கும் வூஹான் கிருமித் தொற்று நிலைமை தீவிரமடைந்து வரும் வேளையில், பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களிடையே பீதியையும் பயத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் திரு லீ நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.
கிருமித் தொற்றால் இன்னும் சிங்கப்பூர் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் அது நடக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதால் சிங்கப்பூரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் திரு லீ கூறினார்.
இதுவரை சிங்கப்பூரில் உறுதிசெய்யப்பட்ட ஏழு கிருமித் தொற்று சம்பவங்களும் ஹுபெய் மாநிலத்தைச் சேர்ந்த சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்டவை.
ஹுபெயில் கடப்பிதழ் கொடுக்கப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழையவோ இடைவழிப் பயணம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்களும் நீண்டநாள் வருகை அனுமதியைப் பெற்றுள்ளவர்களும் அண்மையில் ஹுபெய்க்குச் சென்று திரும்பி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
"நிலைமையை மிக அணுக்கமாக நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கிடையே, அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்," என்றும் திரு லீ வேண்டுகோள் விடுத்தார்.
"நல்ல ஆரோக்கிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன்வழி கிருமித் தொற்றின் அளவை மட்டுப்படுத்த நம்மால் முடிந்த பங்களிப்போம். அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவுங்கள். உங்களுக்கு உடல் நலமில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
"ஒருவர் உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றால் முகக்கவசம் அணிய தேவை இல்லை," என்று பிரதமர் கூறினார்.
வூஹான் கிருமித் தொற்று குறித்து பலர் தம்மிடம் தங்கள் கவலையைத் தெரிவித்ததாக குறிப்பிட்ட திரு லீ, "நான் உங்கள் உணர்வுகளை முழுமையாக உணர்ந்துள்ளேன். நாம் அனைவரும் நமக்காகவும் இங்குள்ள, வெளிநாடுகளில் உள்ள நமது அன்புக்குரியவர்களுக்காகவும் கவலைப்படுகின்றோம்.
"சிங்கப்பூர் மருத்துவமனைகளும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் மிகுந்த தயார்நிலையில் உள்ளனர். 2003ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பரவலில் இருந்து நாம் இதுபோன்ற சம்பவத்திற்கு நம்மை தயார்நிலையில் வைத்துள்ளோம்.
"கிருமித் தொற்று தொடர்பான உண்மையான செய்திகளை மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும்," என்றார்.

