வூஹான் கிருமித் தொற்று சிங்கப்பூரையும் பாதித்துள்ளதை அடுத்து, சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திரும்பும் மாணவர்கள் குறித்து அக்கறை எழுந்துள்ளது. இந்நிலையில், பாலர் பள்ளிகளில் நேற்று சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட மாணவர்கள், பெற்றோர் ஆகியோரைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலை இணையம் வழி சமர்ப்பிக்காத பெற்றோர் அதற்கான படிவங்களை நேற்று பூர்த்தி செய்தனர்.
புவாங்கோக் கிரசெண்ட் வட்டாரத்தில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிக்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று வருகை புரிந்து அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கை
களைப் பார்வையிட்டார். அந்தப் பாலர் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஊழியர்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரின் கைகளில் வெப்பமானியும் கிருமி நாசினி போத்தல்களும் இருந்தன. பாலர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலமுடன் இருப்பதற்கு வூஹான் கிருமித் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியம் என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த மாணவர்கள், பாலர் பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் 14 நாள் கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். சிங்கப்பூரில் ஏறத்தாழ 1,900 பாலர் பள்ளிகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 25,000 ஊழியர்கள் உள்ளனர்.
அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏறக்குறைய 600 பாலர் பள்ளி ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 180,000 பாலர் பள்ளி மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களில் 1,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவர் என்றும் நம்பப்படுகிறது.
"வூஹான் கிருமித் தொற்றால் பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் உடற்குறையுள்ள முதியோரும் மிக எளிதில் பாதிக்கப்
படக்கூடும். அதனால் பாலர் பள்ளிகளிலும் மற்ற சமூக இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கட்டாய விடுப்பில் இருப்போர் வீட்டில் இருக்க வேண்டும் என்று கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 140க்கும் அதிகமான மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிகள் உள்ளன. அவை என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பசால் நடத்தப்படுகின்றன. மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களில் இரண்டு விழுக்காட்டினருக்குக் கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்றும் மனிதவளப் பற்றாக்குறை ஒரு பிரச்சினையல்ல என்றும் மை ஃபர்ஸ்ட் ஸ்கூலின் பொது மேலாளர் திருவாட்டி தியேன் ஐ லிங் கூறினார்.
"எங்களது ஊழியர்கள் நீண்ட மருத்துவ அல்லது மருத்துவமனை விடுப்பில் இருக்கும்போது அவர்களுக்குப் பதிலாகப் பணியாற்ற கூடுதல் ஊழியர்களை நாங்கள் வைத்திருக்கிறோம். எனவே, இந்தக் கட்டத்தில் ஊழியர் பற்றாக்குறை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை," என்றார் அவர்.
மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளிகளில் ஏற்கெனவே சுகாதார, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைமுறையில் உள்ளதாக திருவாட்டி தியேன் தெரிவித்தார். சாதாரண நாட்களிலும் மாணவர்
களின் உடல் வெப்பநிலை இரண்டு முறை சோதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதற்கிடையே, நாளையிலிருந்து பள்ளிகளில் மாணவர்களின் உடல் வெப்பநிலை அன்றாடம் சோதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். சளிக் காய்ச்சலுக்கான அறிகுறி
களுக்காக மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் கண்காணிக்கப்படுவர் என அவர் கூறினார்.
கட்டாய விடுப்பில் இருக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 800 மாணவர்கள் கட்டாய விடுப்பில் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என மொத்தம் ஐந்து பேர் கடந்த இரண்டு வாரங்களில் சீனாவின் ஹுபெய் மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

