வூஹான் கிருமித் தொற்று சந்தேகம்: காஸ்வே பாயிண்ட் சுத்தம் செய்யப்பட்டது

நோயாளி ஒருவர் வூஹான் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உட்லண்ட்ஸ் காஸ்வே பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள ராஃபிள்ஸ்  மருந்தகம் நேற்று அடையாளம் கண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அந்தக் கடைத்தொகுதியை நிர்வகிக்கும் ஃபிரேசர்ஸ் பிராபர்ட்டி நிறுவனம் உறுதி செய்தது.

அந்த நோயாளி இருந்த இடங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் கூறியது.

அந்த நோயாளி பொதுமக்கள் அருகில் செல்லாமல் மருந்தகத்தில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்ததாக அந்நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, அந்த நோயாளியின் அடையாள அட்டை படத்தையும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு ராஃபிள்ஸ் மருந்தகம் எழுதியிருந்த பரிந்துரை கடிதத்தையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தவரைக் கண்டுபிடிக்க மருந்தகம் விசாரணை நடத்தி வருகிறது.

வூஹான் கிருமித் தொற்றால் பாதிப்படைந்ததாகச் சந்தேகிக்கப்படும் அந்த நபரைக் காரணம் காட்டி காஸ்வே  பாயிண்ட் கடைத்தொகுதிக்குப் போக வேண்டாம் என்று வலம் வந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நோயாளி உட்லண்ட்ஸ் மார்டடில் உள்ள இன்னொரு மருந்தகத்துக்கும் சென்றிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மருந்தகம் புளோக் 768 உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ளது.

சமூக ஊடகத்தில் வலம் வந்த அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு மருந்தகங்களுக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள்  நேற்று பிற்பகல் சென்றிருந்தது அவை வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பரிந்துரைக் கடிதத்தில் அந்த நோயாளி இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து அவருக்கு இருமல், இலேசான மூச்சுத் திணறல் உட்பட மற்ற அறிகுறிகளும் ஏற்பட்டதாக அந்தப் பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.