'பொறுப்புடன் பயன்படுத்தினால் போதுமான முகக்கவசங்கள் உள்ளன'

1 mins read

பொறுப்புடன் பயன்படுத்தினால் சிங்கப்பூரில் போதுமான முகக்கவசங்கள் இருப்பதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று தெரிவித்தார்.

"முகக்கவசங்களை வாங்க அவசரப்படத் தேவையில்லை," என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் லாம் பதிவிட்டார்.

பொது மக்களிடம் முகக்கவசங்களை விற்பனை செய்வது குறித்து என்டியுசி ஃபேர்பிரைஸ், யுனிட்டி ஃபார்மசி போன்ற வர்த்தகர்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.

விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள முகக்கவசங்களை என்டியுசி ஃபேர்பிரைசின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங்குடன் பார்வையிட்டதாக டாக்டர் லாம் தெரிவித்தார்.

போதுமான முகக்கவசங்கள் இருப்பதை உறுதி செய்யவும் அவற்றைத் தேவையில்லாமல் குவித்து வைப்பதைத் தடுக்கவும் முகக்கவசங்களைப் பங்கீட்டு முறையில் சில வர்த்தகர்கள் விற்பனை செய்து வருவதாக டாக்டர் லாம் கூறினார்.

முகக்கவசங்களுக்கான விலை யை நிர்மாணிக்க வர்த்தகர்களுடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி அதன் மூலம் லாபம் ஈட்டக்கூடாது என்று வர்த்தகர்களுக்கு அரசாங்கம் நினைவூட்டியிருப்பதாக டாக்டர் லாம் கூறினார். வூஹான் கிருமி இதுவரை உள்ளூரில் பரவவில்லை என்று குறிப்பிட்ட டாக்டர் லாம், பொதுவாக சிங்கப்பூரில் அன்றாட வாழ்க்கைக்காக முகக்கவசங்களை அணிந்துகொள்ள தேவையில்லை என்று கூறினார். வூஹான் கிருமித் தொற்று தொடர்பாக பதற்றம் அடையாமல் விழிப்புடன் இருக்கும்படி அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.