பாதுகாப்பற்ற பணியிடச் சூழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மாது

பாதுகாப்பற்ற பணியிடச் சூழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய மாது

2 mins read
39648ae0-96e7-47a3-8e4f-61eec6b033a6
நீதி நிலைநாட்டப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளதாகக் கூறும் திருவாட்டி பெலிண்டா ஹியூபர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இல்லப் பணிப்பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற பணியிடச் சூழலை வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் இருந்து ஆஸ்திரேலிய மாது ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

பெலிண்டா ஹியூபர், 37, என்ற அந்த ஆஸ்திரேலிய மாதுவின் வீட்டில் 2017ஆம் ஆண்டு டக்குலாட் ரோஸ் மே மாட்டா என்ற பிலிப்பீன்ஸ் மாது பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், டன்யர்ன் சாலைக்கு அருகே உள்ள திருவாட்டி பெலிண்டாவின் வீட்டில், இரண்டாம் தளக் கண்ணாடிக் கூரை மீது பாதுகாப்பற்ற நிலையில் நின்றபடி மாட்டா அதைச் சுத்தம் செய்தது கேமராவில் பதிவானது. திருவாட்டி பெலிண்டா அதை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இடம்பெற்ற விசாரணையின்போது, கண்ணாடிக் கூரையில் நின்றவாறு மாட்டா அதைச் சுத்தம் செய்ததைக் கண்டதே இல்லை என்றும் ஒருவேளை தான் பார்த்திருந்தால் அவரை நிறுத்தச் சொல்லி, உடனே திரும்ப அழைத்திருப்பேன் என்றும் திருவாட்டி பெலிண்டா தெரிவித்தார்.

அதனுடன், தாமதமாக வேலைக்கு வருவது, வழியில் செல்வோரை தம் வீட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கும்படி செய்வது என மாட்டாவிடம் பல பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருவாட்டி பெலிண்டாவிடம் வேலை செய்தபோதே வேறு வீட்டிற்குப் பணிப்பெண்ணாகச் செல்ல விரும்புவதாக மாட்டா தம்மிடம் கூறினார் என்று அண்டை வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த திருவாட்டி விலெகாஸ் லின் பல்பாவ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஜூலையில் கண்ணாடிக்கூரையில் நின்றுகொண்டு மாட்டா அதைச் சுத்தம் செய்ததைத் தாம் கண்டதாகவும் அவர் கூறினார். அந்த நிலையில் தன்னை ஒரு படம் எடுக்கும்படி மாட்டா கேட்டுக்கொண்டதாகவும் தான் அதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பின் அதை மனிதவள அமைச்சுக்கு அனுப்ப வேண்டுமா என்று தான் கேட்டதாகவும் அதற்கு மாட்டா 'ஆம்' என்றதாகவும் அவர் சொன்னார்.

ஆயினும், திருவாட்டி பல்பாவ் அதை அமைச்சுக்கு அனுப்பவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாறாக, அந்தப் படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, பரவலானது.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி கூறியது போலவே, கண்ணாடிக்கூரையில் நின்றபடி தான் சுத்தம் செய்ததைத் தனது முதலாளி இருமுறை கண்டதாக நீதிமன்றத்தில் மீண்டும் சொன்னார்.

ஆனாலும், அவ்வாறு செய்யவேண்டாம் என்று திருவாட்டி பெலிண்டா தன்னிடம் அறிவுறுத்தவில்லை என்றும் மாறாக கிராதியைப் பிடித்துக்கொள்ளும்படி அவர் சொன்னார் என்றும் மாட்டா கூறினார்.

இருப்பினும், கண்ணாடிக் கூரையில் நின்றபடி அதைச் சுத்தம் செய்யுமாறு திருவாட்டி பெலிண்டா தன்னைப் பணிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அப்போது, திருவாட்டி பெலிண்டாவின் வீட்டில் வேலை செய்த இன்னொரு பணிப்பெண் அப்படிச் செய்துகாட்டியதாகவும் அவர் சொன்னார்.

மாட்டாவின் சாட்சியம் நம்பும்படியாக இல்லை என்று நீதிபதி சலினா தீர்ப்பை வாசித்தபோது குறிப்பிட்டார்.