'திறமையை முழுமையாக வளர்க்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும்'

'திறமையை முழுமையாக வளர்க்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கவும்'

2 mins read
fe9e40cf-dfcd-470b-9098-eaf18c86fa3f
ஈடன் சென்டரருக்கு வருகைபுரிந்த அதிபர் ஹலிமா யாக்கோப் அங்கு பயிற்சி பெறும் 32 வயது திரு ஜேம்ஸ் கோர் வெங்காயம் வெட்டுவதைப் பார்வையிடுகிறார். பாதிப்படையக் கூடியவர் தங்கள் திறமைகளை வளர்க்க கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார் அதிபர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் உண்மையில் இருக்க வேண்டுமாயின் பாதிப்படையக்கூடியவர்கள், வசதிகுறைந்தவர்கள் ஆகியோர் தங்கள் திறமைகளை முழுமையாக வளர்க்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிட்டார்.

அவர் நேற்று காலை கிளமெண்டியில் உள்ள பெரியவர்களுக்கான ஈடன் சென்டருக்குச் சென்றிருந்தார். மிதமான, மிக மோசமான ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கொண்ட பெரியவர்களுக்கு அந்த நிலையம் பயிற்சி, ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.

சமுதாயத்துடன் ஒத்துப்போகும் வாழ்க்கைமுறை, சுகாதாரம், தொழில், பயிற்சி மற்றும் திறன் ஆகியவற்றில் அவர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தரமான, நீண்டகால பலன்களை ஏற்படுத்திக் கொடுக்க நிலையம் விழைகிறது.

"ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு ஏதுவான சூழலுடன் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப சமுதாய, பொழுதுபோக்கு, வேலை ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை நிலையம் வழங்குவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். மிக மோசமான ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பவர்களுக்கு வேலையில் நீடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர்களில் சிலர் தொழில் பயிற்சித் திட்டங்களில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் அதிபர் ஹலிமா.

'லேசர் கட்டிங்' முறை இயந்திரத்தைப் பயன்படுத்த ஒரு மாதத்துக்கு மேலாகப் பயிற்சி செய்த 20 வயது திரு டேவின் யேப், தாம் கற்ற திறனைக் கொண்டு அதிபர் ஹலிமாவுக்கு அவர் பெயர் பொறிக்கப்பட்ட மரத்தகடைப் பரிசாகக் கொடுத்தார்.

பதனிடப்பட்ட விலங்கு தோலைத் தைக்க கற்றுக்கொள்ளும் 23 வயது திரு ஜோஷ்வா இங், சொந்தமாக சமைக்க கற்றுக் கொள்ளும் 32 வயது திரு ஜேம்ஸ் கோர் ஆகியோரையும் அதிபர் சந்தித்தார்.

"இத்தகையோருக்கு ஆதரவு வழங்க மேலும் அதிகமான அமைப்புகளும் தனிநபர்களும் பங்களிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அர்த்தமுள்ள, கௌரவமிக்க வாழ்க்கையை வாழ உதவ வேண்டும்," என்றார் அதிபர் ஹலிமா.

ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் பெரியவர்களுடன் மிக அணுக்கமாகச் செயல்படும் நிலையத்தின் பயிற்றுவிப்பாளர்களையும் ஊழியர்களையும் அதிபர் சந்தித்தார்.