போலி செயலியைப் பயன்படுத்திய 120 ஓட்டுநர்களை இடைநீக்கம் செய்த கோஜெக்

போலி செயலியைப் பயன்படுத்திய 120 ஓட்டுநர்களை இடைநீக்கம் செய்த கோஜெக்

2 mins read

போலி செயலியைப் பயன்படுத்திய ஏறத்தாழ 120 ஓட்டுநர்களை கோஜெக் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த இடைநீக்கம் நேற்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. கோஜெக் செயலியைப் போல இருக்கும் இன்னொரு செயலியைப் பயன்படுத்தி பல ஓட்டுநர்கள் அந்த நிறுவனத்தை ஏமாற்றுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நியூ பேப்பர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்ட ஒவ்வொரு ஓட்டுநரும் போலி செயலியை உருவாக்க தலா $300 செலுத்தியதாக நியூ பேப்பர் நாளிதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோஜெக் நிறுவனம் பயணங்களை அங்கீகரித்து உறுதி செய்யும் முறை போலி செயலியில் இருக்காது. அதுமட்டுமல்லாது ஓர் இடத்தில் இருந்துகொண்டு வேறு இடத்தில் இருப்பது போல அதில் காட்டலாம். போலி செயலியைப் பயன்படுத்திய ஓட்டுநர்கள் தங்களுக்குக் கிடைத்த பயணங்களை நிராகரித்தபோது அதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்காது.

போலி செயலி பயன்படுத்திய ஒட்டுநர்களில் சிலர் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களைப் பார்வையிட்டனர். ஓட்டுநர்களுக்கு இத்தகைய போலி செயலிகள் ஆபத்து விளைவிக்கும் என்று கோஜெக் சிங்கப்பூரின் பொது மேலாளர் திரு லியேன் சீங் லுவேன் தெரிவித்தார்.

கூடுதல் பயணங்களைக் காட்டவும் பயணங்களை நிராகரிக்கும்போது அது அவர்களது கணக்கில் பிரதிபலிக்கக்கூடாது என்பதற்காகவும் ஓட்டுநர்கள் இத்தகைய போலி செயலிகளைப் பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.

ஆனால் இந்தப் போலி

செயலிகளைப் பயன்படுத்தும்போது அவர்களது கைபேசியை ஊடுருவப் பயன்படுத்தப்படும் 'மால்வேர்' பொருத்தப்படக்கூடும் என்றும் அதனால் அவர்களது கைபேசியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. போலி செயலியைப் பயன்படுத்திய ஓட்டுநர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளபோதிலும் கோஜெக்கின் சேவைகள் பாதிப்படையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட

ஓட்டுநர்களின் எண்ணிக்கை மொத்த கோஜெக் ஓட்டுநர் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு.