சீனாவுக்குச் சென்ற பிசிஎஃப் அமைப்பின் 200 பேர் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு

சீனாவுக்குச் சென்ற பிசிஎஃப் அமைப்பின் 200 பேர் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு

2 mins read

சீனாவுக்குச் சென்று திரும்பியுள்ள மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின் (பிசிஎஃப்) 7,500 பாலர் பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்தோர் பராமரிப்பு ஊழியர்களில் 200க்கு மேற்பட்டோர் கட்டாய 14 நாள் விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது பிசிஎஃப் அமைப்பின் மாணவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பொருந்தும் என்று அதன் துணை தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி டான் ஜீ லீ நேற்று தெரிவித்தார்.

வூஹான் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசாங்க முயற்சியின் தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, முதியோர் பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்குச் சென்று திரும்பியிருந்தால், அவர்கள் 14 நாள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

"பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ், பிசிஎஃப் ஸ்பார்க்கல் கேர் ஆகியவற்றைச் சேர்ந்த பிள்ளைகள், முதியோர், ஊழியர்கள் ஆகியோர் இம்மாதம் 14ஆம் தேதி முதல் கடந்த 14 நாட்களுக்குள் சீனாவுக்குச் சென்று திரும்பியிருந்தால் அவர்கள் இந்தப் புதிய உத்தரவால் பாதிக்கப்படுவார்கள்.

"பாதிக்கப்பட்ட பிசிஎஃப் ஊழியர்கள், பிசிஎஃப் அமைப்பின் பாலர் பள்ளி, முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில் மூன்று விழுக்காடுதான்," என்று திருவாட்டி டான் விவரித்தார்.

பிசிஎஃப் நிலையங்களின் எல்லா ஊழியர்கள், பிள்ளைகள், முதியோர் தங்களின் எதிர்வரும் பயண ஏற்பாடுகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ், பிசிஎஃப் ஸ்பார்க்கல் கேர் நிலையங்களில் நாள் ஒன்றுக்கும் மூன்று முறை சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவற்றின் நிர்வாகத்தினருக்குக் கூறப்பட்டு உள்ளது என்றும் திருவாட்டி டான் சொன்னார்.

"உடல்நலமில்லாத பிள்ளைகளையும் முதியோரையும் அவர்களின் குடும்பத்தினர் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அவர்களின் உடல் நலம் முழுமையாகத் தேறியவுடன்தான் அவர்கள் நிலையத்துக்குத் திரும்ப வேண்டும்," என்றும் திருவாட்டி டான் கூறினார்.