தயார் நிலையில் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம்

தயார் நிலையில் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம்

2 mins read
a6b092b7-99d6-4219-87c7-1a708f7ad9d3
ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம். படம்: எஸ்டி -

வூஹான் கிருமித்தொற்றை சமாளிக்க, சிங்கப்பூரிலுள்ள தாதிமை இல்லங்களும் முதியோர் பராமரிப்பு நிலையங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

இதற்கிடையே விழிப்புடன் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் (படம்).

ஸ்ரீ நாராயண மிஷன் ஒரு தாதிமை இல்லம், முதியோருக்காக நடவடிக்கைகளை திட்டமிடும் பராமரிப்பு நிலையம், மனநல பாதிப்படைந்தவர்களுக்கான மெராந்தி இல்லம், 2 மூத்தோர் பகல் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

சிங்கப்பூரில் வூஹான் கிருமித் தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன.

சுகாதார அமைச்சு, ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு (AIC), சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வழங்கும் சுற்றறிக்கைகளை முறையாக இந்த இல்லங்களிலும் பராமரிப்பு நிலையங்களிலும் ஸ்ரீ நாராயண மிஷன் கடைப்பிடித்து வருகிறது.

தாதிமை இல்லவாசிகளை காண விரும்பும் விருந்தினர்கள் தாங்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்களா என்பதை ஸ்ரீ நாராயண மிஷன் ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு சீனாவுக்கு அவர்கள் சென்றிருந்தால் அவர்கள் வளாகத்தின் உள்ளே சென்று இல்லவாசியை பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வெவ்வேறு அரசாங்க அமைப்புகள் வெளியிடும் சுற்றறிக்கைகளை தினமும் கண்காணித்து வரும் ஸ்ரீ நாராயண மிஷன், வரும் நாட்களில் முதியோருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சில நடவடிக்கைகளை ஒத்திவைப்பதா, ரத்து செய்வதா அல்லது தொடர்வதா என்பதைப் பரிசீலித்து முடிவெடுக்கும்.

எடுத்துக்காட்டாக, தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவன சமூகப் பொறுப்பின் திட்டத்தின் ஓர் அங்கமாக இல்லத்திற்கு தொண்டூழியம் புரிய வரும் நடவடிக்கைகள் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

"இதுவரையில் அரசாங்க அமைப்புகள் அறிமுகம் செய்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் தற்போதைய வூஹான் கிருமித் தொற்று நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

"இது சாத்தியமாக சமூகப் பங்காளிகளும் தனிநபர்களும் இந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்,'' என்று தெரிவித்தார் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ். தேவேந்திரன்.