வூஹான் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகளாவிய சுகாதார நெருக்கடி மோசமடைந்து வரும் வேளையில் கிருமித்தொற்று தொடர்பான வீண் வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"கிருமித் தொற்றைத் தவிர்க்கவும் குடிமக்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆகவே சிங்கப்பூரர்கள் நிலைமையை அமைதியாகக் கண்காணிக்க வேண்டும்," என்று திருவாட்டி ஹலிமா நேற்றுக் காலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
"நிலைமை மோசமானால், நமது மருத்துவமனைகளும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் பணியில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
"அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் அவர்களின் இந்தப் பெரிய பொறுப்புக்கு மக்களின் ஆதரவு இன்றியமையாதது," என்று அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.
"பொய்ச்செய்திகளையும் வீண் வதந்திகளையும் பரப்பாமல் இருப்பதே, வூஹான் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மக்களின் பங்களிப் பாக அமையும்.
"பொய்ச்செய்திகளும் வீண் வதந்திகளும் மக்களிடையே தேவையில்லாத பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
"அது சம்பந்தப்பட்ட அமைப்புகள் கிருமித் தொற்று தொடர்பான தங்கள் பணிகளை விட்டுவிட்டு, பொய்ச்செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதில் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்," என்றும் திருவாட்டி ஹலிமா விளக்கினார்.
வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் உறுதி செய்ய சுகாதார அமைச்சு வூஹான் கிருமித்தொற்று தொடர்பிலான தகவல்கள் அடங்கிய சிறப்பான இணையப் பக்கத்தைத் தொடங்கியுள்ளதைச் சுட்டிய அதிபர், இந்தத் தகவல்களை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.
வூஹான் கிருமியை, 2003ஆம் ஆண்டில் தோன்றிய சார்ஸ் கிருமியுடன் ஒப்பிட்ட திருவாட்டி ஹலிமா, "2003ல் இருந்ததைக் காட்டிலும் இப்போது சமூக ஊடகங்கள் அதிக வீரியத்துடன் செயல்படுகின்றன. அதனால் வதந்திகளும் பொய்ச்செய்திகளும் அதிவிரைவாக பரவக்கூடும் அபாயம் உள்ளது.
"சார்ஸ் நோய் பரவலைச் சமாளித்த அனுபவம் நமக்கிருப்பதால், வூஹான் கிருமித்தொற்றைச் சமாளிக்க நாம் தயார்நிலையில் இருக்கிறோம்.
"ஆக, இந்த முக்கியமான சூழ்நிலையில் ஒன்றிணைந்து நம்மால் முடிந்த பங்களிப்பை வெளிப்படுத்துவோம். நம்மையும் நமது குடும்பங்களையும் இந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாப்போம்," என்று அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக்கில் வலியுறுத்தினார்.

