ரயில் நம்பகத்தன்மைக்கு முதல் பங்காளித்துவம்

ரயில் நம்பகத்தன்மைக்கு முதல் பங்காளித்துவம்

2 mins read
9a9c0c38-95a6-4b3c-aa84-896d24c4f6ea
மரினா பே சேண்ட்சில் பயன்பாட்டுக் கற்றல் தொடர்பாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் நடத்திய மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது. படம்: சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் -

ரயில் சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்த திறன்கள் பங்காளித்துவ ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்துத் துறையில் இத்தகைய பங்காளித்துவம் கையெழுத்திடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், எஸ்எம்ஆர்டி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவம், எஸ்எம்ஆர்டி பங்காளிகளின் திறன் மேம்பாடு, வேலையிடக் கற்றல் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கும்.

ரயில் நம்பகத்தன்மை, புத்தாக்கம், நிலப் போக்குவரத்துத் துறையின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தப் பங்காளித்துவம் கைகொடுக்கும் என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் தெரிவித்தன. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், எஸ்எம்ஆர்டி, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் ஆகிய மூன்று தரப்பும் புரிந்துணர்வுக் குறிப்பில் நேற்று கையெழுத்திட்டன.

மரினா பே சேண்ட்சில் பயன்பாட்டுக் கற்றல் தொடர்பாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் நடத்திய மாநாட்டில் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்திடப்பட்டது.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார்.

இந்த அறிமுகப் பங்காளித்துவம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பலனைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பங்காளித்துவத்தின்கீழ் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரின் ஆதரவுடன் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் எஸ்எம்ஆர்டியும் இணைந்து பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கும்.

அதுமட்டுமல்லாது, துப்பரவுச் சேவை வழங்கும் நிறுவனங்கள், ரயில் பராமரிப்புச் சேவை நிறுவனங்கள் போன்ற சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் திறன் குறைபாடுகளை அடையாளம் கண்டு அதைச் சரிசெய்ய தேவையான பயிற்சிகளைப் பரிந்துரை செய்ய எஸ்எம்ஆர்டி உதவும்.

"2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு 360 கிலோ மீட்டராக உயர இருக்கிறது. தற்போது ரயில் கட்டமைப்பின் அளவு 20 கிலோ மீட்டர்.

"எனவே, வளர்ச்சி காண இருக்கும் ரயில் துறைக்குத் தேவையான உள்ளூர் திறன்களை உருவாக்குவது அவசியம். ரயில் சேவையையும் பராமரிப்புக்கான நிபுணத்துவத்தையும் தொடர்ந்து மேம்படுத்த எங்களுடன் பயிற்சி செய்யவும் பணியாற்றவும் பங்காளிகளைப் புரிந்துணர்வுக் குறிப்பு ஊக்குவிக்கிறது," என்று எஸ்எம்ஆர்டி ரயில்களின் தலைமை நிர்வாக அதிகாரி திரு லீ லிங் வீ தெரிவித்தார்.

"வேலையிடக் கற்றல் அதிகம் கைகொடுத்தது. தொழில்நுட்பப் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்யவும் அவற்றுக்கு நேர்த்தியுடன் தீர்வு காணவும் அது வழிவகுத்தது. அதிலிருந்து நான் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி எனது சக ஊழியர்களின் இணையம் வழி கற்றுலுக்காகப் பராமரிப்புப் பணிகள் என்ற தலைப்பில் குறுகாணொளிகளை உருவாக்க முடிந்தது. தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எங்களுக்கும் எங்களது பங்காளிகளுக்கும் இந்தப் பங்காளித்துவம் கூடுதல் வாய்ப்புகளைத் தருகிறது," என்று எஸ்எம்ஆர்டி ஊழியர் லிம் செக் பூன் தெரிவித்தார்.