தந்தையர்கள் குழந்தை வளர்ப்பில் தீவிரம் காட்டுவதற்கு ஆதரவாக புதிய கொள்கைப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.
தந்தைக்கான குழந்தைப் பராமரிப்பு விடுப்பை அதிகமாக்குவதும் வீட்டில் தங்கியிருந்து பிள்ளை யைத் தந்தை பார்த்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய களங்கத்தைக் குறைப்பதற்கான பல நடவடிக்கைகளும் அந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
பிள்ளையை வீட்டிலிருந்து கவனித்துக்கொள்ளும் 21 தந்தையரும் அவர்களின் மனைவியர்களில் ஒன்பது பேரும் ஓர் ஆய்வில் பேட்டி காணப்பட்டு அவர்களிடம் இருந்து பல தகவல்களும் திரட்டப்பட்டன.
கொள்கை ஆய்வுக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தந்தையர்கள் வீட்டிலிருந்து பிள்ளையைக் கவனித்துக்கொள்வது ஏன் என்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளன.
பொருளியல் காரணங்கள் அவற்றில் ஒன்று. வெளியில் இருந்து ஆதரவு எதுவுமின்றி தங்கள் பிள்ளைகளைத் தாங்களே வளர்த்து உருவாக்க அவர்கள் விரும்புவது மற்றொரு காரணம் என்று ஆய்வை நடத்திய திருவாட்டி இயோனி அறிவழகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நிதி உதவி அளித்தது.
இந்த ஆய்வு பல கொள்கைப் பரிந்துரைகளை முன்வைத்து இருக்கிறது.
வீட்டிலிருந்து பிள்ளையைப் பேணி வளர்க்க தந்தையர் எடுக்கும் முடிவில் பொருளியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
இதை அணுக்கமாகப் பிரதிபலிக்கும் வகையில் இங்கு கொள்கைகள் இடம்பெற வேண்டும் என்று ஆய்வு யோசனை தெரிவித்து உள்ளது.

