வூஹான் கொரோனா கிருமித்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படும் நிலைமையைச் சந்திக்கும் டாக்சி ஓட்டுநர்
களுக்கும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் ஒருமுறை படித்தொகையாக குறைந்தபட்சம் $100 வழங்கும். தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய டாக்சி சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருப்போர் கூடுதலாக $200 பெறுவர். இதுவும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் படித்தொகையாகக் கருதப்படும்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நேற்று இந்த விவரங்களை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அரசாங்கம் ஏற்கெனவே நாள் ஒன்றுக்கு $100 என வழங்கிவரும் உதவித்தொகைக்கு அடுத்தபடியாக இந்த படித்தொகையும் சேரும்.
தனிமைப்படுத்தப்படும் நிலையால் பாதிக்கப்படும் கோஜெக், கிராப், ரைட் போன்றவற்றின் ஓட்டுநர்கள் உதவித்
தொகைக்குத் தகுதிபெறுவதோடு வாடகை தள்ளுபடியையும் பெறுவர்.
பாதிக்கப்படும் ஓட்டுநர்களுக்கான வாடகை தள்ளுபடியை கம்ஃபர்ட்டெல்குரோ, எஸ்எம்ஆர்டி, பிரிமியர் டாக்ஸி, டிரான்ஸ்-கேப் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தன.
பாதிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய டாக்சி சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றோடு டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களும் இணைந்து முத்தரப்புப் பராமரிப்பு உதவித்தொகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கிடையே கிராப் சிங்கப்பூர் நிறுவனத்தின் சிங்கப்பூர் தலைமை அதிகாரி யீ வீ டாங் தமது நிறுவன ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை குறித்து விளக்கி உள்ளார்.
வூஹான் கொரோனா கிருமித்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படும் தமது நிறுவன ஓட்டுநர்களின் வருமான இழப்பை ஈடுசெய்யும் விதமாக $500 உதவித்தொகை வழங்கப்படும் என்றார். அரசாங்கம் வழங்கும் உதவித்தொகை $100, முத்தரப்பு பராமரிப்பு உதவித்தொகுப்பு ஆகியவற்றோடு ஒருமுறை உதவித்தொகை 500 வெள்ளியும் கிராப் ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும்.
இருமல், சளி போன்ற சுவாசப் பிரச்சினை அறிகுறி இருப்பின் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறும் உடல்நலம் குன்றினால் மருத்துவ உதவியை நாடுமாறும் தமது நிறுவன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக திரு யீ குறிப்பிட்டார்.
கோஜெக் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொது மேலாளர் லியன் சூங் லுயென், ஒட்டுநர் நலத் திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் தங்களது ஓட்டுநர்கள் தனிமைப்
படுத்தப்படும் நிலைக்கு ஆளானால் வருவாய் பாதுகாப்புத் தொகையாக $1,000 பெறுவார்கள் என்றும் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக 14 நாட்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்படும் ஓட்டுநர்கள் இதைவிட கூடுதல் தொகை பெறுவார்கள் என்றும் கூறினார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தேசிய தனியார் வாடகை வாகன சங்கம், தேசிய டாக்சி சங்கம் ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கும் டாக்சி, தனியார் வாடகை வாகன நிறுவனங்களின் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்திருப்பதால் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என அவர்கள் கூறியதாக திரு இங் குறிப்பிட்டார்.

