கிருமித்தொற்று: பாதிக்கப்படும் துறைகளுக்கு அரசு உதவிக்கரம்

2 mins read
1632c77f-1fb8-4d6a-8a6f-5bf9e2dd07b2
-

வூஹான் கொரோனா கிருமித்தொற்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ள பயணத்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் உதவிக்கரம் நீட்ட அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சருமான அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "நேரடியாக அதிக பாதிப்பைச் சந்திக்கக்கூடிய துறைகள் இவை. இவற்றின் தேவைகளைக் கவனித்து அதற்கேற்ற வகையில் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது," என்றார்.

மேலும், இந்த இரு துறைகளுக்கும் என்னமாதிரி உதவிகள் என்பது பற்றிய முழுவிவரங்கள் இம்மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்று திரு ஹெங் கூறினார்.

ஷாங்ரி லா ராசா செந்தோசா உல்லாசத்தளம் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான நிலைமையை சமாளித்த விதம் குறித்து அதன் ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக நேற்று அங்கு சென்றிருந்தார் துணைப் பிரதமர்.

"நிலைமை வேகமாக மாறிவருகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

"இருப்பினும், நடவடிக்கையில் இறங்க அரசாங்கம் தயாராகி வருகிறது என்பதை சிங்கப்பூரர்களுக்கு உறுதிபடத் தெரிவிக்கிறேன். இப்போது எழுந்திருக்கும் சவாலைத் திறம்பட சமாளிக்கக்கூடிய வகையில் வரவு-செலவுத் திட்டம் அமையும்," என்றார் அவர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளியலில் பெரிய அளவிலான சரிவு வரக்கூடும் என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்தினார்.

அதனை கருத்தில்கொண்டு இவ்வாண்டின் வரவு-செலவுத் திட்டம் வலுவான ஒன்றாக அமையும் என்றார் திரு ஹெங்.

இதற்கிடையே, தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நிதி அமைச்சும் வர்த்தக தொழில் அமைச்சும் நேற்று கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டன.

சாங்கி விமான நிலையம் வழியான ஆகாயப் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் ஹோட்டல் அறை முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவது அதிகரித்து வருவதாலும் பயணத்துறையும் போக்கு வரத்துத் துறையும் நேரடியாக பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக அவ்வறிக்கை சுட்டியது.

மேலும் பாதிப்பின் தாக்கம் தொழிற்கூடங்களிலும் நிறுவனங்களிலும் பிரதிபலிக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டுள்ள அரசாங்கம், அதன் தொடர்ச்சியாக வரும் மாதங்களில் பொருளியல் சரிவு ஏற்பட்டால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதரவளிக்க தயாராகி வருவதாக அமைச்சுகள் தெரிவித்துள்ளன.

உலகப் பொருளியல் நிலைத்தன்மை பெறுவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வூஹான் கொரோனா கிருமித்தொற்று எதிர்பாராதவிதமாக உருவெடுத்துவிட்டதாக அவை குறிப்பிட்டுள்ளன.

நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ முன்வந்துள்ள அரசாங்கம், பொருளியலை மறுசீரமைக்கவும் புதிய நிபுணத்துவத் திறன்களை உருவாக்கவும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தவும் முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றும் என்று அவ்விரு அமைச்சுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.