ஒருங்கிணைப்பை வளர்க்கும் சமூகப் பணி

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு புதிய வாழ்க்கை தேடி சிங்கப்பூருக்கு வந்த கட்டுமானப் பொறியாளர் பெருமாள் மூர்த்தி, பல்வேறு சமூகப் பணிகளின் மூலம் சிங்கப்பூரின் நல்லிணக்கத்திற்கு தொடர்ந்து வலுசேர்த்து வருகிறார். பட்டுக்கோட்டையில் பிறந்த திரு மூர்த்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பின்னர் முதுநிலை படிப்புக்காக 1993ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தார்.

முதுநிலை பட்டப்படிப்பை ஈராண்டுகளில் முடித்த பின்னர் தமக்குக் கட்டுமானப் பொறியாளர் வேலை கிடைத்து இத்துறையில் இங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார். வாழ்க்கையில் பிரகாசமாக வேண்டும் என்ற கனவுடன் வந்திருந்த திரு மூர்த்தி, தம்மை பெரிய நிலையில் உயர்த்தியது இங்கு படித்த முதுநிலை படிப்புதான் என்றார். சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது தனது தந்தை வழி உறவினர்கள் சிலர் இங்கே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சொந்த நாட்டைப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படவில்லை என்றார்.

கடந்த 1996ல் திரு மூர்த்திக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் கிடைத்தது. சிங்கப்பூரின் வசதி, பாதுகாப்பு, வாய்ப்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் கவரப்பட்டு சிங்கப்பூரைத் தனது நிரந்தர இல்லமாக்கிக்கொள்ள விரும்பினார் திரு மூர்த்தி. அடுத்த ஆண்டே அவர் சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். சமூக இணைப்புகளை விரிவுபடுத்த விரும்பிய அவர், சிங்கப்பூரின் அடித்தள அமைப்புகளில் சேர முடிவெடுத்தார்.

“1997ஆம் ஆண்டில் புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் குடி புகுந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டியோ ஹோ பின் மக்களைக் காண அங்குள்ள பல புளோக்குகளுக்கு வருகை அளித்திருந்த நேரத்தில் நான் அவரைச் சந்தித்து உரையாடினேன்,

“மாலை 5.30 மணிக்கு வேலை முடிந்தபோது எனக்கு அப்போது நிறைய நேரம் இருந்ததால் சமூகப் பணிகளில் ஈடுபடலாம் என எண்ணினேன். அது குறித்து அவரிடம் கேட்டபோது டாக்டர் டியோ, வட்டாரக் குழுவினருடன் இணைய பரிந்துரைத்தார்,” என்றார் திரு மூர்த்தி.

வட்டாரக் குழுவில் சேர்ந்த பிறகு சிங்கப்பூரர்களுடன் பழகுவது சுலபமாக இருந்ததாகத் திரு மூர்த்தி கூறினார்.

“இந்தியாவில் சமூக நிகழ்ச்சி கள், ரத்ததான முகாம்கள் போன்ற வற்றை அதிகம் நடத்தியுள்ளதால் அந்த அனுபவத்தைச் சிங்கப்பூரில் பயன்படுத்தினேன். இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளில் அதிகமானோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்களாக மாறியுள்ளனர். சந்தையிலோ அல்லது பொது இடங்களிலோ பலர் என்னைப் பார்த்து சிரிப்பர் அல்லது உரையாடுவர். இதனால் நான் அடையும் மகிழ்ச்சி சமூகப் பணியில் என்னை மேலும் ஈடுபடுத்துகிறது,” என்றார் திரு மூர்த்தி.

2001ல் இந்திய நற்பணிச் செயற்குழுவினருடன் தீபாவளி நிகழ்ச்சியைச் செய்யத் தொடங்கினார் திரு மூர்த்தி. நிகழ்ச்சிகளை வித்தியாசமாகச் செய்யவேண்டும் என நினைத்து புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த முனைந்தார்.

“2006ஆம் ஆண்டில் புதிய குடியேறிகள் அதிக அளவில் வந்தபோது அவர்களை இந்தச் சமுதாயத்துடன் ஒருங்கிணைக்கும் பணிக்காக மக்கள் கழகம், சமூக மன்றங்களில் அதிக ஈடுபாட்டுடன் சேவையாற்றிய தொண்டூழியர்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில் நானும் ஒருவன்,”

“2008ல் மக்கள் கழகம் தொடங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவில் 20 மன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். எனது சேவைகளுக்காக நான் பரிந்துரையின் மூலம் அந்தக் குழுவின் தலைவரானேன்,” என்றார் அவர்.

சிங்கப்பூருக்கு வரும் குடியேறிகள் பலர் சமூகப் பணிகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு மூர்த்தி, இன்னும் பலர் தங்களுக்கு பழக்கப்பட்ட, சிரமமில்லாத வாழ்க்கைச் சூழலிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார். புதிய குடியேறிகளில் சிலர், சிங்கப்பூர் சமுதாயத்துடன் விரைவில் ஒருங்கிணைவதாகவும் சிலருக்கு அந்த ஒருங்கிணைப்பு தாமதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“பலர் இங்கு வரும்பொழுது தங்களது வாழ்வாதாரத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு கவலைப்படுகின்றனர். குறிப்பாக, இளம்பிள்ளைகளை இங்கு வளர்ப்போருக்கு அந்தக் கவலை அதிகம். ஆயினும் இங்கேயே வளரும் அவர்களது பிள்ளைகளாவது சிங்கப்பூர் தமிழர்களுடன் இரண்டற கலப்பதே எங்கள் விருப்பம்,” என்றார். இரண்டு மகள்களுக்குத் தந்தையான திரு மூர்த்தி, தம் குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்களின் மறுமலர்ச்சிக்கு லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டங்கள் வித்திட்டதாகவும் அங்கிருந்து பொங்கல் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரின் பல்வேறு இடங்களுக்குப் பரவியதாக இந்த ஆண்டின் பொங்கல் ஒளியூட்டின்போது பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் பொங்கல் கொண்டாடும் முயற்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தார் திரு மூர்த்தி. இதுவரை தமது வட்டாரத்தினருக்குத் தீபாவளி நிகழ்ச்சிகளை மட்டுமே செய்துவந்த திரு மூர்த்தி, தமிழர் திருநாளான பொங்கலைப் பெரிதளவில் கொண்டாட எண்ணினார்.

“இதுகுறித்து நான் என் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டிருந்தேன். பொங்கல் கொண்டாட்டங்களை நடத்த அவரும் எனக்கு ஊக்கமளித்தார்,

“2008ல் புக்கிட் பாஞ்சாங்கில் முதன்முதலான நான் ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்கள் எளிமையாக இருந்தன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தின்கீழ் நடைபெற்ற அந்தக் கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்துகொண்டனர்,” என்றார் அவர். அப்போது முதல் 13 ஆண்டுகளாகத் தொடர்ந்த அந்தக் கொண்டாட்டங்களின் பிரம்மாண்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது.

சீனர், மலாய்க்காரர்கள் மட்டுமின்றி இத்தாலியர்கள், மெக்சிக்கோ நாட்டினர், பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்களையும் இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்திய பெருமை திரு மூர்த்தியைச் சேரும்.

“பொங்கல் சிங்கப்பூரில் இப்போது பல இனத்தவரும் பல நாட்டினரும் ஒன்றிணையும் திரு நாளாக உருவாகியுள்ளது. என்னுடன் பாடுபட்ட ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தொண்டூழியர்களுக்கும் நன்றி ,” என்றார் அவர்.

புதிய குடியேறிகளை சிங்கப்பூருக்குள் ஒருங்கிணைக்க பொங்கலைக் கையாண்ட திரு மூர்த்தி, மேன்மேலும் பல முயற்சிகளின் வழி தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்ய விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!