அதிபர் ஹலிமா யாக்கோப் இந்தோனீசியப் பயணம்

2 mins read

அதிபர் ஹலிமா யாக்கோப் நாளையிலிருந்து இந்தோனீசியாவுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தோனீசிய அதிபர் ஜோக்கா விடோடோவின் அழைப்பை ஏற்று அதிபர் ஹலிமா இந்தோனீசியா செல்கிறார்.

போகோரில் உள்ள இந்தோனீசிய அதிபர் மாளிகையில் அவருக்கு வரவேற்பு விருந்து அளிக்கப்படும்.

இந்தப் பயணத்தில் சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே உள்ள நல்லறவு மறுஉறுதி செய்யப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் அதிபர் ஒருவர் இந்தோனீசியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்லும் அதிபர் ஹலிமா, அதிபர் ஜோக்கோ விடோடோவைச் சந்திப்பார்.

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் தொடங்கி வைத்த மனிதாபிமானத் திட்டம் ஒன்றை அதிபர் ஹலிமா நேரில் சென்று பார்வையிடுவார்.

அதுமட்டுமல்லாது, இந்தோனீசியாவின் பலசமயத் தலைவர்களையும் இந்தோனீசியாவில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும் அவர் சந்திப்பார்.

இந்தோனீசியாவின் யோக்யகார்த்தா நகரத்துக்கும் அதிபர் ஹலிமா செல்கிறார். யோக்யகார்த்தா இந்தோனீசியாவின் கலாசார, மரபுடைமை நகரமாகக் கருதப்படுகிறது.

வரும் வியாழக்கிழமை வரை அதிபர் ஹலிமா இந்தோனீசியாவில் இருப்பார். இந்தோனீசியத் துணை அதிபர் மாருஃப் அமின்னையும் அவர் சந்திப்பார்.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இந்தோனீசியாவின் தொழில்துறை அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தொழில்துறை 4.0 பயிற்சித் திட்டத்தை அதிபர் ஹலிமா பார்வையிடுவார்.

கலிபாட்டா மாவீரர்கள் கல்லறையில் அதிபர் ஹலிமா மலர் வளையம் வைத்து மரியாதை செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிபர் ஹலிமாவுடன் அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷியும் உடன் செல்கிறார்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, வெளியுறவு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சேம் டான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெசிக்கா டான், சக்தியாண்டி சுபாட், ஆங் வெய் நெங் ஆகியோரும் அதிபர் ஹலிமாவுடன் இந்தோனீசியா செல்கின்றனர்.