அமைச்சர் ஈஸ்வரன்: சிறந்த பண்பை நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும்

அமைச்சர் ஈஸ்வரன்: சிறந்த பண்பை நாம் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும்

2 mins read
622d5888-f8eb-4885-b608-98b988747b65
தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரனிடமிருந்து சீனப் புத்தாண்டு அன்பளிப்புகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளும் வெஸ்ட் கோஸ்ட் விஸ்தா குடியிருப்பாளர்கள். படம்: அமைச்சர் ஈஸ்வரன் ஃபேஸ்புக் -

வூஹான் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் எடுத்திருக்கும் நடவடிக்கை அதன் ஒன்றுபட்ட, மீள்திறன் கொண்ட சமூகத்துக்கு நற்சான்று என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தீவு முழுவதும் நடைபெற்று வரும் முகக்கவச விநியோக நடவடிக்கைக்கு பொதுமக்கள் அளித்து வரும் ஒழுங்குமுறையான ஆதரவை அமைச்சர் சுட்டினார்.

"என்னைச் சந்தித்த குடியிருப்பாளர்கள் பலர் தங்களிடம் போதுமான அளவில் முகக்கவசங்கள் உள்ளதால் அரசாங்கம் வழங்கும் இலவச முகக்கவசங்களைத் தாங்கள் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் முகக்கவசம் அதிகம் தேவைப்படுபவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்," என்று வெஸ்ட் கோஸ்ட் விஸ்தா குடியிருப்பாளர்களின் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்ட திரு ஈஸ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

"இது எப்படிப்பட்ட பரிவான சமூகத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சிங்கப்பூரில் இந்தச் சிறந்த பண்புக்கு நாம் தொடர்ந்து மதிப்பளித்து, அதைக் கட்டிக்காக்க வேண்டும்," என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் 1.3 மில்லியன் குடும்பங்களுக்கு தலா நான்கு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

அந்த முகக்கவச விநியோக நடவடிக்கை நேற்று முன்தினம் தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நீடிக்கும்.

முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளும் வரிசையில் மக்கள் அதிக நேரம் காத்திருக்கவில்லை என்றும் அது முறையாக நடந்து வருகின்றது என்றும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து குடும்பங்களுக்கும் கொடுத்த பிறகு எஞ்சியிருக்கும் முகக்கவசங்கள் பின்னர் நல்ல முறையில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார் அமைச்சர்.

"நமது சுகாதாரப் பராமரிப்பு சேவை அதிகாரிகளுக்குப் போதுமான சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பொருட்களை வழங்குவதே நமது முன்னுரிமையாக உள்ளது.

"அவர்கள்தான் பல வழிகளில் நமது முன் நிலை அதிகாரிகளாகச் செயல்படுகின்றனர். ஆக, அவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு அவர்களுக்குத் தேவையான வளங்களை நாம் வழங்க வேண்டும்," என்றும் திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

முகக்கவசத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையான செயலைத் தவிர, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது, தனிமைப்பட்டிருப்போருக்கு உதவுதல் போன்ற பல வழிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

"நமது பொதுத் துறை, அதிகாரிகள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் வேகமாக மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப, மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்றனர். இது நமது ஒற்றுமையான சிங்கப்பூர் சமூகத்தின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கிறது," என்றார் அவர்.