முகக்கவசம் விநியோகம் தொடங்கப்பட்ட முதல் நாளின் முடிவில் சிங்கப்பூரின் 1.3 மில்லியன் குடும்பங்களில் 6 விழுக்காட்டு குடும்பங்கள் தங்களுக்கான முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
"மக்கள் மிக அமைதியாக தங்கள் முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டு வருகின்றனர். யாருக்கும் பதற்றமோ மன உளைச்சலோ இருந்ததாகத் தெரிவிக்கப்படவில்லை," என்று அமைச்சர்நிலை தொகுதி சுற்றுலாவின் ஒரு பகுதியாக தெலுக் பிளாங்கா, புளோக் 47ல் உள்ள வசிப்போர் குழு நிலையத்தில் நடைபெற்ற முகக்கவசம் விநியோக நடவடிக்கையைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் திரு லீ பேசினார்.
சிலர் தங்களுக்கு முகக்கவசம் கிடைக்குமா என்று விசாரித்துள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா நான்கு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று சிங்கப்பூரர்களுக்கு உறுதியளித்தார்.
"வூஹான் கொரோனா கிருமித் தொற்று போன்ற பொதுச் சுகாதாரச் சவால்கள் கண்ணுக்குத் தெரியாத சவால்களாக இருக்கின்றன. அவை மக்களுக்குத் தேவையில்லாத பதற்றத்தைக் கொடுக்கும்.
"இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் மக்கள் சமூகத்துடன் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து, விதிமுறைகளை மதித்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்கத் தேவையான பொருட்களைப் பெற்றுச் செல்வார்கள் என்று நம்புகிறோம்," என்று தேசிய வளர்ச்சிக்கான இரண்டாம் அமைச்சருமான திரு லீ விவரித்தார்.
மக்களுக்கு இருக்கும் அச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், "முகக்கவசங்களை நாம் விவேகமாகப் பயன்படுத்த வேண்டும். காரணம், ஒருவேளை இன்னும் அதிக காலத்துக்கு முகக் கவசங்களுக்கான தேவை அதிகரிக்கக்கூடும்.
"இதற்கு சிங்கப்பூரர்கள் ஒருவர் மற்றவரின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து சமூக பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் பாலர்பள்ளிகள், உடற்குறையுள்ளவர்களுக்கான இல்லங்கள் போன்றவற்றுக்குச் சென்று சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை அவர்களுக்கு விளக்குகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
முகக்கவசங்களைப் பெற்றுக்கொள்ள வந்தவர்களில் ஒருவரான 73 வயது திரு அய்யாவு சின்னசாமி சோமு, "முகக்கவச விநியோகம் பற்றிய அறிவிப்பை மின்தூக்கியில் பார்த்தேன். எவ்வித நெரிசலும் இல்லாமல் எளிதில் எங்கள் குடும்பத்துக்கான முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டேன்," என்றார் எரிசக்தித் துறையில் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திரு சின்னசாமி சோமு.

