ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்

ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்

2 mins read
ead34e22-f5db-470d-934f-0a6c55fed7d5
சுத்தப்படுத்தும் திரவத்தைக் கொண்டு கண்ணாடிக் கதவுகளை துடைக்கிறார் ஓவேசியா டௌன்டவுன் ஹோட்டலின் ஊழியர் ஒருவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்கள், சுற்றுப்பயணி வழிகாட்டிகள் ஆகியவற்றின் உரிமக் கட்டணங்களை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தள்ளுபடி செய்வதுடன் தங்கள் இடங்களில் வூஹான் கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளைக் கையாண்ட ஹோட்டல்களின் தூய்மைப்படுத்தும் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகளையும் ஈடுகட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பயணத்துறை சார்ந்த வர்த்தகங்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் முதற்படியாகவும் இது திகழ்கிறது என்று கழகம் நேற்று தெரிவித்தது.

இதற்கான முழு விவரங்கள் இம்மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும்.

"கடந்த ஒரு வாரத்தில், எங்கள் பயணத்துறை பங்காளிகளுடன் தொடர்புகொண்டு கிருமித் தொற்றால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி தெரிந்துகொண்டோம்.

"இந்த நிலைமை கொஞ்ச காலத்துக்குத் தொடரக்கூடும் என்பதால், பயணத்துறைக்குத் தேவைப்படும் ஆதரவைத் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம்," என்றார் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி திரு கீத் டான்.

உலகமெங்கும் 14,000க்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் மொத்த அனைத்துலக வருகையாளர்களில் 20 விழுக்காட்டினர் சீனாவின் சுற்றுப்பயணிகள். கடந்த ஆண்டு மட்டும் 3.6 மில்லியன் சீன சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர்.

இந்த உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக வூஹான் கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளைக் கையாண்ட ஹோட்டல்களின் தூய்மைப்படுத்தும் மற்றும் சுத்திகரிப்புப் பணிகளுக்கான செலவுகளை ஈடுகட்ட உதவி கிடைக்கும்.

அந்த வகையில், மூன்றாம் தரப்பு நிபுணத்துவம் சார்ந்த தூய்மைப்படுத்தும் கட்டணங்களில் 50 விழுக்காட்டை பயணத்துறைக் கழகம் ஏற்றுக்கொள்ளும். இது உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு $20,000 உதவி என்றும் சந்தேகத்துக்குரிய நோயாளி தங்கியிருந்த ஹோட்டலுக்கு $10,000 உதவி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.