கிருமித்தொற்று தொடர்பான இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை

1 mins read

வூஹான் கொரோனா கிருமித் தொற்று இருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்லது உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வூஹான் கொரோனா கிருமித் தொற்று இருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்லது உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்ற இடங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் வாட்ஸ்அப் சமூக ஊடகத்தில் பரவி வருவதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் அரசாங்க அமைப்புகள் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டது பொய்த் தகவல். கிருமித் தொற்று இருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்லது உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்ற இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டியதில்லை. பொது இடங்கள் போன்ற நிலையற்ற தொடர்பால் கிருமித் தொற்று நிகழும் சாத்தியம் குறைவு. மேலும் சமூக அளவில் கிருமித் தொற்று இருப்பதற்கு சான்றுகள் இல்லை," என்றும் அந்த ஆலோசனை அறிக்கையில் கூறப்பட்டது.

இதற்கிடையே, தேசிய சுற்றுப்புற வாரியமும் நேற்று முன்தினம் இதுபோன்ற ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வாரியத்தின் வழிகாட்டி விதிமுறைகளுக்கு ஏற்ப, தனது அதிகாரிகள் குடியிருப்பாளர்களுடனும் இடங்களின் உரிமையாளர்களுடனும் அணுக்கமாக பணியாற்றி, அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தது.

பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகள், உணவங்காடி நிலையங்கள் போன்ற இடங்களில் தூய்மைப்படுத்தும் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் பற்றி ஆலோசனைகளையும் தான் வழங்கி வருவதாக வாரியம் விவரித்தது.