சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டோருக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் நடப்புக்கு வந்த 13 மணி நேரத்தில் சிங்கப்பூருக்குள் நுழைய 15 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 1 மணி வரை 15 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், மலேசியர் ஒருவர், இரு அமெரிக்கர்கள், சீனாவைச் சேர்ந்த ஐவர், இந்தியக் கடப்பிதழ் வைத்திருந்த ஐவர் ஆகிய 15 பேர் கடந்த 14 நாட்களில் சீனாவுக்குச் சென்றுள்ளனர் அல்லது விசா தற்காலிக ரத்து செய்யப்பட்டவர்கள் என்றும் ஆணையம் விளக்கியது.
சிங்கப்பூரில் உள்ள சீன நாட்டவர்களுக்கு இந்தப் பயணக் கட்டுப்பாடு பொருந்தாது என்றும் நேற்று முன்தினம் வரை தங்கள் சமூக வருகை அனுமதியை நீட்டிக்க விண்ணப்பித்திருந்த 50 சீனக் குடிமக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் ஆணையம் கூறியது.

