வேலை தேடும்போது இன, பாலின பாகுபாடு இல்லை: ஆய்வில் 80 விழுக்காட்டினர் கருத்து

வேலை தேடும்போது இன, பாலின பாகுபாடு இல்லை: ஆய்வில் 80 விழுக்காட்டினர் கருத்து

2 mins read
fdb0e65e-c18d-4fd7-a885-501c4d01b0cb
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வேலை தேடும்போது இனம், பாலினம், சமயம், குடியுரிமை, திருமண நிலை அல்லது பிள்ளைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தவரை பாகுபாடு காட்டப்படுவதில்லை என்று பத்தில் எட்டு பேர் கூறுகிறார்கள்.

வேலை நியமன நிபந்தனைகள், ஊழியர் நன்மைகள், வாழ்க்கைத்தொழில் மேம்பாடு, பயிற்சி, செயல்திறன் மதிப்பீடு ஆகியவற்றைப் பார்க்கையில் நிறுவனங்கள், தங்களைச் சமமாகவும் நியாயமாகவும் நடத்துவதாக பெரும்பாலான ஊழியர்கள் கூறுகிறார்கள்.

மனிதவள அமைச்சு 2018ல் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. மனிதவளத் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இன்று (பிப்ரவரி 3) நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி தொகுதியில்லாத உறுப்பினர் லியோன் பெரேராவுக்கு அளித்த பதிலில் இந்த ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டினார்.

வேலையிடத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிற புகார்களின் எண்ணிக்கை 2015ல் 580ஆக இருந்தது. அது 2018ல் 200ஆகக் குறைந்துவிட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த அளவு, அனைத்துப் புகார்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கையில் 1 விழுக்காடுகூட இல்லை என்றார்.

55 முதல் 64 வயது வரை உள்ள சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2009ல் 57 விழுக்காடாக இருந்தது என்றும் அது 2019ல் 68 விழுக்காடாக அதிகரித்து உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோல பெண்களைப் பொறுத்தவரை, 25 முதல் 64 வயது வரை உள்ள குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்கான வேலை நியமன விகிதங்கள் 64 விழுக்காட்டிலிருந்து 73 விழுக்காட்டிற்குக் கூடின. அமைச்சு நடத்திய ஆய்வு 3,100 தனிப்பட்டவர்களையும் 3,400 நிறுவனங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்டது. அது நாடு தழுவியதாக இருந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நியாயமான வேலை வாய்ப்புகள் பற்றிய அறிக்கை ஒன்றை இந்த ஆண்டு பிற்பகுதியில் அமைச்சு வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#சிங்கப்பூர் #வேலை #பாகுபாடு #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்