ஆசியாவின் ஆகப்பெரிய விமானக் காட்சியான சிங்கப்பூர் விமானக் காட்சி பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், 2019 நோவல் கொரோனா கிருமி தொற்றுக் காரணமாக சில விமான தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அப்படி அறிவித்து உள்ள நிறுவனங்களில் டெக்ஸ்ட்ரான் அண்ட் ஜெனரல் டைனமிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கல்ஃப்ஸ்டிரிம் பிரிவும் அடங்கும். தென்கொரிய விமானப் படையும் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்து இருப்பதாகக் கூறியது.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் ஏற்பாட்டு நிறுவனமான எக்ஸ்பீரியா ஈவெண்ட்ஸ், திட்டமிட்டபடி கண்காட்சி நடக்கும் என்று சென்ற வாரம் அறிவித்தது.
இருந்தாலும் நோவல் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கண்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அது கூறியுள்ளது.
கண்காட்சியின்போது வருகையாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உதவுவதற்குத் தயாராக மருத்துவர்களும் ஊழியர்களும் இருப்பார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் இதற்கு முன் 2018ல் நடந்த விமானக் கண்காட்சிக்கு 147 நாடுகளைச் சேர்ந்த 54,000 வர்த்தகப் பேராளர்கள் வந்திருந்தனர். 1,062 நிறுவனங்கள் அதில் பங்கெடுத்துக்கொண்டு தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தன.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடக்கும் விமானக் கண்காட்சியில் சில நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட ஆகப்பெரிய நிறுவனங்கள் தாங்கள் அந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் திட்டத்தில் உள்ளதாக தெரிவித்து உள்ளன

