சிங்கப்பூர் விமானத் துறை உச்சநிலைக் கூட்டம் ரத்து

சிங்கப்பூர் விமானத் துறை உச்சநிலைக் கூட்டம் ரத்து

1 mins read

மான்டிரியல்: கொரோனா கிருமி பரவல் அச்சம் காரணமாக சிங்கப்பூரில் நடைபெறவிருந்த விமானத் துறை உச்சநிலைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆகப்பெரிய விமானக் கண்காட்சிக்கு முன்னதாக இந்த உச்சநிலை மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு சிங்கப்பூர் விமானக் கண்காட்சி தலைமைத்துவ கூட்டம் நடைபெறாது என்று ஐநா அனைத்துலக சிவில் விமான நிறுவனமும் அந்தத் தொழில்துறையைச் சேர்ந்த தகவல்களும் உறுதி செய்துள்ளன. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உச்சநிலை மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதற்கு மறுநாள் பிப்ரவரி 11ஆம் தேதி பிரதான விமான கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி வழக்கம்போல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானக் கண்காட்சியிலிருந்து சில நிறுவனங்கள் விலகிய நிலையில் உச்சநிலை மாநாடு ரத்தாகியுள்ளது.

சிங்கப்பூர், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நாட்டுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது.

'சி919' ஜெட் விமானங்களை உருவாக்கும் சீன நிறுவனமான 'கமர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா' மற்றும் இதர ஒன்பது சீன நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்று நேற்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பம்பார்டியர், டெக்ஸ்ட்ரான், ஜெனரல் டைனமிக்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் விமானக் கண்காட்சியில் பங்கேற் கவில்லை.