கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரில் சென்ற ஆண்டு அதிகமான குற்றச் செயல்கள் பதிவாகின. 2018ஆம் ஆண்டில் 33,126ஆக இருந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6.3% கூடி, 35,209ஆக உயர்ந்தது.
2011ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 608ஆக இருந்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 2018ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 587ஆகச் சரிந்தது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் குற்ற விகிதம் 100,000 பேருக்கு 617 என அதிகரித்தது.
பதிவான ஒட்டுமொத்த குற்றங்களில் நான்கில் ஒன்று மோசடி தொடர்பானது. 2018ல் 6,189ஆக இருந்த மோசடிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 9,502ஆகக் கூடியது.
அதேபோல, மோசடிகளால் ஏற்பட்ட பண இழப்பும் 16% அதிகரித்தது. முந்தைய ஆண்டில் $144.9 மில்லியனாக இருந்த அந்தத் தொகை 2019ஆம் ஆண்டில் $168.1 மில்லியனாக ஏற்றம் கண்டது. 2016க்குப் பிறகு மோசடிகள் மூலம் இழந்த அதிகபட்ச தொகை இதுதான்.
மோசடிகளைத் தவிர்த்துப் பார்த்தால், பதிவான மற்ற குற்றங்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ல் 4.7% குறைந்தது. அதாவது, 2018ல் 26,937ஆக இருந்த மோசடிகள் தவிர்த்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை 2019ல் 25,707ஆக இறக்கம் கண்டது.
மனிதர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், சொத்துகள் தொடர்பான கடுமையான குற்றச் செயல்கள், பூட்டை உடைத்து கொள்ளை மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள், திருட்டு மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்தன.
இணையம், சமூக ஊடகங்கள் வழியாகத் தங்களை இன்னார் என கண்டுபிடிக்க முடியாமல் மற்றவர்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதால் பெரும்பாலான மோசடிப் பேர்வழிகள் அதைச் சாதகமாக்கிக் கொண்டு, சந்தேகம் எழாத வகையில் மிரட்டிப் பணம் பறிக்கின்றனர் என்று வர்த்தக விவகாரத் துறையின் இயக்குநர் டேவிட் சியூ குறிப்பிட்டார்.
"பெரும்பாலான மோசடிகள் வெளிநாடுகளில் இருந்தே அரங்கேற்றப்படுகின்றன. ஏமாந்தவர்களின் பணம் சிங்கப்பூரைவிட்டு வெளியே செல்வதைக் காண்கிறோம். இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும் மோசடிக்காரர்களைப் பிடிக்கவும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளுடன் போலிஸ் தொடர்ந்து ஒத்துழைக்கும்," என்று திரு டேவிட் சியூ கூறினார்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் பணியை போலிஸ் தொடர்ந்து மேற்கொள்ளும் என்ற அவர், அதே வேளையில் இதில் மக்களும் தங்கள் பங்கை ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

