சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

2 mins read
be8e6220-cb08-483f-9ea5-bd49d74134ae
'பொஃப்மா' எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திருத்தம் செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யும்படி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோப்புப்படம்: எஸ்டி -

'பொஃப்மா' எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் திருத்தம் செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யும்படி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி திருத்தம் செய்த கூற்றுகள் உண்மையிலேயே முதலில் தவறாக இருந்தன என்றும் அதற்குச் சான்றாக புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்பட்டன என்றும் நீதிபதி ஆங் செங் ஹோங் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

'பொஃப்மா' சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கானது, சிங்கப்பூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) தொடர்பில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் இரு ஃபேஸ்புக் பதிவுகள் மற்றும் அக்கட்சியின் இணையத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரை சம்பந்தப்பட்டது. அந்த ஃபேஸ்புக் பதிவுகளில், உள்ளூர் 'பிஎம்இடி' பிரிவினருக்கான வேலைவாய்ப்பு சரிந்து, வேலைவாய்ப்பின்மை கூடியதுபோல் விளக்கப்படம் இடம்பெற்று இருந்தது.

அத்துடன், உள்ளூர் 'பிஎம்இடி' பிரிவினரில் ஆட்குறைப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அக்கட்சியின் இணையத் தளத்தில் இடம்பெற்ற ஒரு கட்டுரைக்கான இணைப்பும் அந்த ஃபேஸ்புக் பதிவுகளில் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, அந்தப் பதிவுகளிலும் கட்டுரையிலும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்யுமாறு மனிதவள அமைச்சு அறிவிப்புக் கடிதம் அனுப்பியது.

உள்ளூர் 'பிஎம்இடி' பிரிவினரில் ஆட்குறைப்பு விகிதம் அதிகரிக்கும் போக்கு காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சு, அதற்குச் சான்றாக ஊழியர் சந்தை ஆய்வுத் தரவுகளையும் காட்டி இருந்தது. 2015க்கும் 2018க்கும் இடையே 'பிஎம்இடி' பிரிவினரில் ஆட்குறைப்பு விகிதம் குறைந்திருந்ததை அந்த ஆய்வுத் தரவுகள் காட்டின.

ஆனால், 2010ஆம் ஆண்டில் இருந்து தரவுகளையும் சேர்த்துக் கொண்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, நீண்டகால அடிப்படையில் ஆட்குறைப்பு ஏறுமுகத்தில் இருப்பதாக வாதிட்டது.

தனது ஃபேஸ்புக் பதிவுகளிலும் இணையத்தளக் கட்டுரையிலும் திருத்தம் செய்யும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி கடந்த மாதம் 3ஆம் தேதி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, மனிதவள அமைச்சிடம் முறையிட்டது. ஆனால், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, சென்ற மாதம் 7ஆம் தேதி சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.