நீர்க்குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $48,000 அபராதம்

நீர்க்குழாயைச் சேதப்படுத்திய நிறுவனத்திற்கு $48,000 அபராதம்

1 mins read
8c3c9c43-8de7-4b33-9a4f-3b4e2edcce27
சிங்கப்பூரின் மிகப் பெரிய 'நியூவாட்டர்' குழாய்களில் ஒன்றைச் சேதப்படுத்தியதற்காக பொறியியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றுக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூரின் மிகப் பெரிய 'நியூவாட்டர்' குழாய்களில் ஒன்றைச் சேதப்படுத்தியதற்காக பொறியியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றுக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2018, டிசம்பர் 26ஆம் தேதி 'ரயோபி ஜியோடெக்னிக்' என்ற அந்த நிறுவனம், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் சுரங்க ரயில் பணிகளுக்காக, சுங்கை பிடோக் பகுதியில் நிலத்தைத் துளையிடும் பணியை மேற்கொண்டது.

அப்போது, சாங்கி நியூவாட்டர் ஆலையில் இருந்து சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளுக்கு நீரை எடுத்துச் செல்லும் முக்கிய நீர்க்குழாய் சேதப்படுத்தப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் ஓர் அறிக்கை மூலம் நேற்று தெரிவித்தது.

2.2 மீட்டர் விட்டம் கொண்ட அந்த நீர்க்குழாய் உடைந்ததால் 4.3 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான நீர் வீணானதாகவும் அந்த நீரைக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்படும் அளவிலான இரு நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம் என்றும் கழகம் குறிப்பிட்டது.

சேதமான அந்தக் குழாயில் 100 மி.மீ. நீளத்திற்கு, வட்ட வடிவில் வெடிப்பு காணப்பட்டதாகவும் இரு நாட்களுக்கும் மேலாக ஆழமாக நிலத்தைத் தோண்டி அந்த வெடிப்பைக் கண்டறிந்து, நீர்க்கசிவைத் தடுத்து நிறுத்தியதாகவும் கழகம் தெரிவித்தது.