ஹுபெய் மாநிலம், வூஹான் நகரில் உள்ள சிங்கப்பூரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு அழைத்து வர மற்றொரு விமானத்தை அனுப்பும் சிங்கப்பூரின் கோரிக்கையை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் டிஆர்5120 என்ற அந்த விமானம் நேற்று வூஹான் நகருக்குப் புறப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்றால் பெரிதும் பாதிப்படைந்த அந்நகருக்கு இந்த விமானம் மருத்துவப் பொருட்கள், பரிசோதனைக் கருவி கள் உட்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களைக்கொண்டு சென்றது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் சிங்கப்பூருக்கான சீனத் தூதரான ஹோங் ஸியாவ்யோங்கும் சாங்கி விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் சந்தித்தனர். கிருமித்தொற்று சோதனைக் கருவிப்பெட்டிகள் சீனத் தூதருக்குக் கொடுக்கப்பட்டன.
"இந்தச் சவாலைச் சமாளிக்க சிங்கப்பூர் சீனாவுடனும் அனைத்துலகச் சமூகத்துடனும் அணுக்கமாகச் செயல்படும்," என்று டாக்டர் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்னர் பதிவிட்டார்.
மனிதாபிமான உதவிகளை ஏற்றிச்செல்லும் அந்த விமானம், வூஹானில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களை இங்கு அழைத்து வரும்.
"சீன பாரம்பரியத்தின்படி இன்று அனைவரும் ஒன்றுகூடும் நாளான சாப் கோ மெய் தினம் இருப்பதால் இந்த விமானப் பயணம் மேலும் சிறப்பு வாய்ந்தது. இது நம் சிங்கப்பூரர்களையும் அவர்களது குடும்பங்களையும் வூஹானிலிருந்து கொண்டுவரப்போகிறது," என்று டாக்டர் விவியன் நேற்று கூறினார்.
சம்பந்தப்பட்ட சிங்கப்பூரர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்று காலை நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்கு உகந்த தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

