கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக தனிநபர்களைத் தொடர்புகொள்ளும்போது அவர்களிடம் நிதி விவரங்கள் குறித்த கேள்விகளை அதிகாரிகள் கேட்கமாட்டார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கிருமித்தொற்று தொடர்பாக ஏமாற்று தொலைபேசி அழைப்புகள் பற்றி சமூக ஊடகங்களில் தகவல் பரவலானதை அடுத்து அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
"கொரோனா கிருமித் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் அணுக்க தொடர்புகொண்டவர்களை அடையாளம் காண சுகாதார அமைச்சு தனிநபர்களைத் தொடர்புகொண்டு வருகிறது," என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சு நேற்று பதிவிட்டிருந்தது.
சுகாதார அமைச்சிடம் இருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றவர்கள், அதனை உறுதிப்படுத்த விரும்பினால் அமைச்சின் பொது அவசர அழைப்பு எண் 6325-9220 உடன் தொடர்புகொள்ளலாம் என்று அந்தப் பதிவு குறிப்பிட்டுள்ளது.

