குமாரி ஸாங் ஹுவாஷியாங் என்ற 28 வயது தாதியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற 51 வயது மலேசிய நாட்டவருக்கு வெள்ளிக்கிழமை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
ஸாங் வேறு ஓர் ஆடவருடன் பழகியதாகக் கூறியதால் கடந்த 2016ஆம் மார்ச் மாதம் சர்கியூட் ரோட்டிலுள்ள தமது வாடகை வீட்டில் போ சூன் ஹோ சீன நாட்டவரான ஸாங் ஹுவாஷியாங்கின் கழுத்தை துண்டால் நெரித்துக் கொன்றார். பின்னர் அவரது உடலுடன் உறவுகொள்ள முயற்சி செய்தார்.
போ, குமாரி ஸாங்குடன் பழகிய காலத்தில் பாலியல் ரீதியான தொடர்புகொண்டிருக்கவில்லை. எனினும், சீன நாட்டவரான ஸாங்கை தமது தோழி என்று அவர் நினைத்திருந்தார்.
படம் பார்க்கச் சென்றபோது ஸாங் சோளப்பொறி ஊட்டிவிட்டதாலும் ஆடைகள் வாங்கியபோது தமது கருத்துகளைக் கேட்டதாலும் அவர் தம்மை காதலராகக் கருதியதாக உணவக ஊழியரான போ நினைத்திருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
போ, குமாரி ஸாங் இருவருக்கும் 2011 அல்லது 2012 முதல் நட்பு ஏற்பட்டது. குமாரி ஸாங்கிற்கு தாம் அன்பளிப்புகள் வாங்கித் தந்ததாகவும் செலவுகள் செய்ததாகவும் போ கூறினார். தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு போ கேட்டபோது குமாரி ஸாங் மௌனமாக இருந்துள்ளார்.
2016 தொடக்கத்தில் ஸாங் வேறொருவருடன் பழகுவதாக சந்தேகப்பட்ட போ, மார்ச் 21ஆம் தேதி அவரை தமது வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைத்தார்.
தமது அறையில் ஸாங் தலைசீவுவதைப் பார்த்த போ அவருடன் உறவுகொள்ள முட்பட்டார். ஆனால் ஸாங் எதிர்த்துப்போராடினார்.
அப்போது குமாரி ஸாங் வெளியில் சென்ற ஆடவர் பற்றி போ கேட்டுள்ளார். அவர் சீனாவிலிருந்து வந்த தமது முன்னாள் காதலர் என்றும் அவருடன் செல்வது தவறில்லை என்றும் ஸாங் கூற இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. கோபமடைந்த போ, துண்டால் ஸாங் கழுத்தைச் சுற்றி இரண்டு நிமிடங்கள் நெரித்துள்ளார். பின் அவரது உடலை தமது கட்டிலில் கிடத்தி ஆடைகளைக் களைந்து படங்கள் எடுத்துள்ளார். அவருடன் உறவுகொள்ளவும் முயன்றுள்ளார்.
இந்தக் குற்றத்தை நோக்கமில்லா மரணமாகக் கருதி தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று போவின் வழக்கறிஞர் திரு இயூஜின் துரைசிங்கம் வாதிட்டார். தூண்டப்பட்டதால் திடீரென ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பால் சுய கட்டுப்பாட்டை போ இழந்துவிட்டதாக அவர் சொன்னார்.
ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி பாங் காங் சாவ் அப்படியே தூண்டுதல் கொலை செய்யும் அளவுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக ஏற்றுக்கொள்ள முடியாது, கொலைக் குற்றச்சாட்டுக்கு தற்காப்பு வாதமாகவும் ஆகாது என்று கூறினார்.
தண்டனை, தீர்ப்பு இரண்டையும் எதிர்த்து போ மேல் முறையீடு செய்வார் என்று திரு துரைசிங்கம் கூறினார்.

