வூஹான் நகரிலிருந்து 174 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்

வூஹான் நகரிலிருந்து 174 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பினர்

1 mins read
2f7f4580-aaf9-4abf-af92-79f01b520b58
வூஹான் தியன்ஹே அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு ஸ்கூட் விமானத்தில் ஏறுவதற்கு முன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் முகக்கவசங்களை வழங்குகின்றனர். படங்கள்: வெளியுறவு அமைச்சு -
Google News Preferred Icon

கொரோனா கிருமித்தொற்று மையம் கொண்டிருக்கும் வூஹான் நகரிலிருந்து 174 சிங்கப்பூரர்களை அழைத்து வர அங்கு அனுப்பப்பட்ட இரண்டாவது விமானம் நேற்றுக் காலை சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

வூஹானிலிருந்து வந்த ஸ்கூட் விமானச் சேவை TR5121யில் வந்த பயணிகள் அனைவரும் சாங்கி விமான நிலையத்தில் சுகாதாரப் பரிசோதைனக்கு உட்படுத்தப்பட்டனர்.

"காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் உள்ளவர்கள் கூடுதல் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். எஞ்சிய பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள்," என்று அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரர்களைத் திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையில் உதவுவதற்காக வெளியுறவு அமைச்சின் தூதரக அதிகாரிகளும் மருத்துவ ஊழியர்களும் ஸ்கூட் விமானத்தில் வூஹான் நகருக்குச் சென்றனர்.

"இந்நடவடிக்கையில் உதவிய சீன மத்திய அரசாங்கத்துக்கும் ஹுபெய் மாநில அரசாங்கத்துக்கும் வூஹான் நகராட்சிக்கும் சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது," என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.

அதே விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து வூஹான் நகருக்குத் திரும்பிய சிலரும் பயணம் செய்தனர்.

வூஹானிலிருந்து அழைத்து வரப்பட்ட முதல் பிரிவினராக 92 சிங்கப்பூரர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினர்.