பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே அதிகாரிகள் தகவலைப் பரப்பக்கூடாது என்று பொதுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில், நெருக்கடிநிலையில் இது குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
"எங்களது செயல்முறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதையும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குரிய பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்திருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என்றார் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களை மேற்பார்வையிடும் அமைச்சர்கள்நிலை பணிக்குழுவில் இடம்பெறும் திரு சான்.
சிங்கப்பூரில் 'டோர்ஸ்கோன்' விழிப்புநிலை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சின் செய்தி அறிக்கை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவியது.
ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நேற்று தொகுதிஉலா சென்ற திரு சானிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அன்றைய தினம் மாலை 5.20 மணியளவில் 'டோர்ஸ்கோன்' விழிப்புநிலை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது.
எனினும், இது குறித்த விவரங்களைக் கொண்ட சுகாதார அமைச்சின் செய்தி அறிக்கை ஒரு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கசிந்துவிட்டது.
தகவலை முன்கூட்டியே வெளியிடாமல் இருப்பதில் அதிகாரிகள் கட்டொழுங்கும் முதிர்ச்சியும் கொண்டிருக்க வேண்டும் என வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு சான் குறிப்பிட்டார்.
அதேவேளையில், நெருக்கடிநிலையில் துரிதமாக செயல்படுவதற்காக, ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இங்கு 'டோர்ஸ்கோன்' விழிப்புநிலை ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டபோது, அனைத்து அமைச்சுகளும் அவற்றின் நடைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டியிருந்ததைத் திரு சான் சுட்டினார்.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஈடுபட்டதால் விழிப்புநிலை உயர்த்தப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் அரசாங்கத்தால் உரிய மாற்றங்களைச் செயல்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"அதேவேளையில், மேற்கூறப்பட்ட சம்பவத்தில் சுகாதார அமைச்சின் செய்தி அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்பட்ட ஒரே காரணத்திற்காக எங்களது செயல்முறைகள் அனைத்தையும் மெதுவடையச் செய்யக்கூடாது.
"அப்படி செய்துவிட்டால், சிங்கப்பூரர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் கிடைக்காது," என்று திரு சான் விவரித்தார்.
இந்நிலையில், வர்த்தகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான திட்டங்கள் பல்வேறு அமைச்சுகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக திரு சான் தெரிவித்தார்.
உடல் வெப்பநிலை சோதனை, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது உள்ளிட்டவை அந்தத் திட்டங்களில் அடங்கும்.

