பாய லேபார் தேவாலயம் காரணமாக இருக்கக்கூடும்

பாய லேபார் தேவாலயம் காரணமாக இருக்கக்கூடும்

2 mins read
2c8f9182-28a9-40b4-bb61-e77306d3011d
பாய லேபார் ரோட்டில் அமைந்துள்ள 'தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்' தேவாலாயம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனது அனைத்து நேரடிச் சந்திப்புகளையும் பிரார்த்தனைக் கூட்டங்களையும் நிறுத்தியுள்ளது. படம்: எஸ்டி -

உள்ளூரில் கொரோனா கிருமித்தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் பாய லேபார் ரோட்டில் உள்ள ஓரு தேவாலயத்தின் போதகர் அங்கு வரும் பிரார்த்தனையாளர்களிடம், சீன நாட்டவருக்கெதிரான வெறுப்புணர்ச்சியை விட்டொழித்து, கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர், சீனா, முதல் நிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவ ஊழியர்கள் குழு ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பாய லேபார் ரோட்டில் அமைந்துள்ள 'தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்' தேவாலாயம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனது அனைத்து நேரடிச் சந்திப்புகளையும் பிரார்த்தனைக் கூட்டங்களையும் நிறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் அதன் பிரார்த்தனைகள் இப்போது யூடியூப் இணையத்தளம் வழியாக இடம்பெறுகிறது.

நேற்றுக் காலை 10.30 மணிக்கு இடம்பெற்ற அந்தப் பிரார்த்தனை கூட்ட ஒளிபரப்பின்போது மாண்டரின் மொழியில் பேசிய அருள்திரு வின்செண்ட் சூ, தங்கள் தேவாலயம் உள்ளூரில் கிருமித்தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்ற செய்தி அறிந்து பிரார்த்தனையாளர்கள் பதற்றம் அடைந்திருப்பார்கள் என்று தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

யூடியூப் இணையத்தளப் பிரார்த்தனை ஒளிபரப்புக்கு நேற்று சில உறுப்பினர்கள் உதவினர்.

"இந்தக் கிருமித்தொற்றுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினரின் தவறுதான் என்று சொல்லவில்லை. மாறாக, உள்ளூர் மருத்துவ ஊழியர்கள், சிங்கப்பூர் மக்கள், சீனாவில் வூஹானில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அல்லும் பகலுமாகப் போராடிக்கொண்டிருக்கும் அதன் மருத்துவ ஊழியர்களுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்," என்று அருள்திரு வின்செண்ட் சூ கேட்டுக்கொண்டார்.

எண் 146B, பாய லேபார் ரோட்டில் உள்ள 'தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்' தேவாலாயம் உள்ளூர் கிருமித்தொற்றுப் பரவலுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று நேற்று முன்தினம் அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான 52 வயது மாது அந்தத் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார்.

நோய்த்தொற்றியல் புலனாய்விலும் கிருமித்தொற்றியவர்களின் நடமாட்டத்தையும் கவனமாக ஆராய்ந்ததில், முன்னதாக அறிவிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தத் தேவாலயத்துக்குச் சென்றவர்கள் (சம்பவங்கள் 8, 9, 31, 33) என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

தனது வளாகம் முழுவதையும் நிபுணத்துவ துப்புரவு நிறுவனத்தின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு தனது அனைத்துக் கூட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தேவாலயம் பின்னர் தெரிவித்தது.