ஈரறை 'ஃபிளெக்சி' திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, புதிய ஈரறை வீடுகளில் பாதிக்கு மேற்பட்ட வீடுகளை 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் வாங்கியுள்ளனர்.
இந்த முதியவர்களில் பத்தில் ஒன்பது பேர், 15 முதல் 45 ஆண்டு வரையிலான குறுகியக்கால குத்தகை வீடுகளை வாங்கியுள்ளனர் என்றும் இதில் 40 ஆண்டு குத்தகைக்கால வீடுகளே ஆகப் பிரபலமானவை என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று தெரிவித்தது.
2015ஆம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை வீவக 28,900 ஈரறை 'ஃபிளெக்சி' வீடுகளை விற்பனைக்கு விட்டது. அப்போது முதல் 27 நிறைவுபெற்ற விற்பனை நிகழ்வுகளில் விடப்பட்ட 25,106 ஈரறை 'ஃபிளெக்சி' வீடுகளில் 85% அல்லது 21,348 வீடுகள் பதிவு செய்யப்பட்டது என்று வீவக கூறியது.
இதில் 55 விழுக்காட்டு வீடுகளை 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்கள் வாங்கினர். எஞ்சியுள்ள வீடுகளை குடும்பங்களும் ஒற்றையர்களும் வாங்கினர்.
முதியவர்கள் வாங்கிய வீடுகளில் 92 விழுக்காட்டு வீடுகள் அல்லது 10,705 வீடுகள் குறுகியகால குத்தகையின் அடிப்படையில் வாங்கப்பட்டன. எஞ்சியவை 99 ஆண்டு குத்தகைகால வீடுகள்.
40 ஆண்டு குத்தகைகாலத்தின் அடிப்படையில் 3,339 வீடுகளும் 35 ஆண்டு குத்தகைகாலத்தின் அடிப்படையில் 2,903 வீடுகளும் 30 ஆண்டு குத்தகைகாலத்தின் அடிப்படையில் 1,884 வீடுகளும் விற்கப்பட்டன என்று வீவக நேற்று தெரிவித்தது.

