கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவரும் வேளையில் வெளிநாட்டுப் பணிப்பெண்களும் அவர்களின் முதலாளிகளும் ஓய்வு நாட்கள் குறித்த மாற்று ஏற்பாடுகள் பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
உள்ளூரில் 40 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்த பிறகு, மனிதவள அமைச்சு, வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான சமூக ஆதரவுச் சங்கம் (ஃபாஸ்ட்) ஆகியவை இணைந்து நேற்று கூட்டாக ஆலோசனைக் குறிப்பை வெளியிட்டன.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 44 வயது இந்தோனீசியப் பணிப்பெண்ணும் அடங்குவார். கெவன் ரோட்டில் உள்ள யோங் தாய் ஹாக் சீன மருத்துக் கடையில் வேலை பார்த்த தனது முதலாளியான 28 வயது சிங்கப்பூர் குடியிருப்பாளரிடமிருந்து அவருக்குக் கிருமி தொற்றியது.
ஒருவேளை, வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு வீட்டில் ஓய்வெடுக்கும்படி பணிப்பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால், தங்கள் ஓய்வு நாட்களை விட்டுக்கொடுக்க சம்மதித்த பணிப்பெண்களுக்கு முதலாளிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பணிப்பெண்கள் உட்பட வீட்டு உறுப்பினர்களின் உடல் வெப்பநிலையை முதலாளிகள் ஒரு நாளைக்கு இருமுறை எடுக்க வேண்டும் என்றும் சுவாசப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

