கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகக் கட்டடங்களில்உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பணியாளர்களும் வருகையாளர்களும் உள்ளே அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில், சன்டெக் சிட்டி, ராஃபிள்ஸ் பிளேஸ் போன்ற வர்த்தக வட்டாரங்களில் நேற்றுக் காலையில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது.
சன்டெக் சிட்டியில் நேற்று காலை 8 மணியில் இருந்தே வரிசை தொடங்கியது. 'டவர் 5'ன் நுழைவாயில் பகுதியில் பாதுகாவலர்கள் இருவர் நின்றபடி வெப்பமானிகளைக் கொண்டு அவ்வழியாக வந்தோரின் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தனர்.
அதேபோல, ராஃபிள்ஸ் பிளேஸ் வாயில் பகுதிகளின் அருகே உள்ள கட்டடங்களிலும் அலுவலகப் பணியாளர்கள் தங்களது உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
வாடகைக்கு இருப்பவர்களும் வருகையாளர்களும் கட்டடத்தில் நுழையுமுன் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என்றார் 'ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ்' கட்டடத்தின் பேச்சாளர்.
'டோர்ஸ்கான்' நோய்ப்பரவல் விழிப்புநிலைக் குறியீடு ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டட நிர்வாகப் பணியாளர்களும் ஒப்பந்ததாரர்களும் நாள்தோறும் உடல் வெப்ப நிலையைச் சோதிக்க வேண்டியது அவசியம். 'ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ்' கட்டடத்தின் பொது இடங்கள் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படுவதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

