ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் 17 வயது உயர்நிலைப்பள்ளி மாணவன் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த மாணவனிடம் அதிகாரிகள் முதன்முதலாக விசாரணை நடத்தினர். அப்போது அவனுக்கு 15 வயது. சமூக வலைத்தளத்தில் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் முகம் சிதைந்தது போல காட்டும் படத்தை அந்த மாணவன் பதிவேற்றம் செய்திருந்தான். இஸ்லாமிய கோட்பாட்டின்படி நடந்துகொள்ளாத சிங்கப்பூரை ஆதரிக்கும் அதிபர் ஹலிமாவின் தலையைத் துண்டிக்கும்படி அவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இணையம் வழி கிடைத்த வெளிநாட்டுத் தொடர்பு மூலம் அந்த மாணவன் தீவிரவாதக் கொள்கைமீது பற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சு கூறியது. அந்த வெளிநாட்டு நபர் 2017ஆம் ஆண்டில் அந்த மாணவனுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினார். இந்த வலைத்தளங்கள் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தனிப்பிட்ட பரப்புரைகளைப் பெற முடிந்ததாக அந்த மாணவன் நம்பியதாக அமைச்சு கூறியது. "அந்த மாணவனின் கண்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக தெரிந்தது. அந்த அமைப்பு இஸ்லாத்துக்காக சண்டை போட்டதாகவும் அதனால் பகைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வன்முறை நியாயமானது என்றும் அவன் கருதினான்," என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அந்த மாணவன் தீவிரவாதப்போக்கைத் தழுவியது குறித்து 2017ஆம் ஆண்டில் தெரியவந்ததும் அவனை அந்தத் தவறான பாதையிலிருந்து மீட்க முயன்றதாக அமைச்சு கூறியது. ஆனால் அந்த மாணவன் விடாப்பிடியாக ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளனாக தொடர்ந்தான்.
சிரியாவிலும் ஈராக்கிலும் ஆட்சியைப் பிடிக்க ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதிலும் இணையத்தில் அதன் கொள்கைகளைப் பரப்ப அந்த மாணவன் விரும்பியதாக அமைச்சு கூறியது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உத்தரவிட்டால் அதற்கு ஆதரவாக மற்ற நடவடிக்கைகளிலும் இறங்க அவன் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக அவன் கொண்டிருந்த கருத்துகளை அவன் மற்றவர்களிடம் பரப்பியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று அமைச்சு கூறியது.
இதற்கிடையே, திரு அபு தல்ஹா சமாட் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜாமியா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அபு தல்ஹா சமாட், மறுவாழ்வுத் திட்டத்தில் ஈடுபட்டு திருந்தியதாக அமைச்சு கூறியது. அவர் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கமாட்டார் என்று கூறிய அமைச்சு, அவரது தடுப்பு ஆணைக்கான காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவுற்றதும் அவரை விடுதலை செய்ததாகக் கூறியது.
இருப்பினும், அவர் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. அதன்படி அவர் வேலை மாறவோ வீடு மாறவோ முடியாது. அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முடியாது.

